முஸ்லிம்களுக்கு பாதகமான அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு ஹக்கீம் துணை போகிறார்: அமைச்சர் றிசாட் குற்றச்சாட்டு

🕔 January 6, 2018

 

– சுஐப் எம்.காசிம் –

முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்புக்கு சாவு மணி அடிக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை எவ்வாறாவது அமுல்படுத்துவதற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை துடியாய்த் துடித்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டாரத்துக்கான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜலீலை ஆதரித்து, மாவடிப்பள்ளியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“மர்ஹூம் அஷ்ரபின் மறைவின் பின்னர் தலைமைப் பதவியைக் கெஞ்சிப்பெற்ற தற்போதைய தலைவரின் நடவடிக்கைகள், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான அக்கறையை நமக்கு வெளிப்படுத்தவில்லை.

நோர்வேயின் உதவியுடன் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்தில், முஸ்லிம்கள் தொடர்பில் அப்போதைய அரசாங்கம் எந்தவிதமான கரிசனையும் செலுத்தாமல் இருந்தது. அப்போது, ஆட்சியின் பங்காளியான முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதைத் தட்டிக்கேட்காமலிருந்தார்.

அதாவுல்லாஹ், மர்ஹூம் அன்வர் இஸ்மாயில், நான் உட்பட இன்னும் சில நாடாளுமன்றமன்ற உறுப்பினர்கள், ஹக்கீமிடம் சென்று சமுதாயத்துக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தியபோது எம்முடன் முரண்பட்டார்.

முஸ்லிம் சமூகத்தை பலிகொடுத்து அந்த உடன்படிக்கையை அரசாங்கம் மேற்கொண்ட போதும், கால ஓட்டத்தில் அந்த உடன்படிக்கை செயலிழந்து போனதால், இறைவன் நமது சமூகத்தைப் பாதுகாத்தான்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன், மு.கா தலைவர் மேற்கொண்ட ஒப்பந்தத்திலும், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை “இடம்பெயர்ந்த முஸ்லிம்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்த வாசகத்தைக்கூட கருத்திலெடுக்காது, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முஸ்லிம் சமூகத்துக்கு துரோகம் இழைத்தார்.

இரண்டு பேரினவாதக் கட்சிகளும் புதிய அரசியல் தீர்வுத்திட்டத்தை எவ்வாறாவது கொண்டுவர வேண்டுமென்று முயற்சித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், அந்தத் தீர்வுத்திட்டம் முஸ்லிம்களுக்கு பாதகமான ஒரு விடயமா? என்பதைக்கூட பொருட்படுத்தாத மு.கா தலைமை, ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில் “தீர்வுத்திட்டத்தை எவ்வாறாவது நடைமுறைப்படுத்துவோம்” என சூளுரைத்திருப்பது சமூகத்தின் மீதான முஸ்லிம் காங்கிரஸின் அக்கறை என்ன என்பதை புலப்படுத்துகின்றது.

இடைக்காலத் தீர்வுத்திட்டத்தில் தமிழர்களை தமிழிலும், சிங்களவர்களை சிங்களத்திலும், முஸ்லிம்களை இரண்டு மொழிகளிலும் ஏமாற்றியிருப்பதை நாங்கள் வெளிப்படையாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதுமட்டுமின்றி, இந்தத் தீர்வுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டால் முஸ்லிம் சமுதாயத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்கள் வெகுவாகக் குறைவதற்கும், எமது பேரம் பேசும் சக்தி இல்லாமல் போவதற்குமான நிலை உருவாகும் ஆபத்து இருப்பதை, நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதுமாத்திரமின்றி, நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு, வடக்கு – கிழக்கு இணைப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டால் முஸ்லிம் சமூகத்தின் வாக்குப்பலம் சிதைக்கப்படக் கூடிய ஆபத்தும் இருக்கின்றது. மொத்தத்தில் நமது சமுதாயத்துக்கு அடிமை விலங்கிடப்போகும் இந்தத் தீர்வுத்திட்டத்தை, அந்தக் கட்சியும், அந்தத் தலைமையும் ஏன் ஆதரிக்கின்றது? என்பது எமக்குப் புரியவில்லை.

மு.காவில் இருக்கும் பலர், அந்தக் கட்சித் தலைவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கு “ஆமாம் சாமி” போடாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹசன் அலி உட்பட கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பலர், இன்று தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் யானைப் பாகர்களை இல்லாமல் செய்வதற்காகவே தமது கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்ததாக, ஒரு வேடிக்கையான புதிய கதையை அவிழ்த்துவிட்டு மக்களை மடையர்களாக்கி உள்ளனர். அண்ணன் சம்பந்தனுடன் சேர்ந்து இறக்காமம் மாயக்கல்லி சிலையை அகற்றப்போவதாகக் கூறிய மு.கா தலைமை, அந்தப் பிரதேச மக்கள் கிளர்ந்தெழுந்த போது, இரண்டுவார காலத்தில் அகற்றித் தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், இற்றைவரை எதுவுமே இடம்பெறவில்லை. எனவேதான் சமுதாய நலனைக் காக்க மக்கள் காங்கிரஸ் இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.

சமுதாயத்துக்கான இந்தப் பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும், நாம் துவண்டு விடப்போவதில்லை. மாற்றத்துக்கான மக்களின் எழுச்சியில் நீங்களும் உங்களைப் பங்காளர்களாக்கிக் கொள்ளுமாறு வேண்டுகின்றேன்” என்றார்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி காரியாலத்தையும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் திறந்துவைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்