முஸ்லிம் காங்கிரஸும் ஊன்றுகோலும்

🕔 January 2, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

திருவிழா’ என்று உவமிக்குமளவுக்கு தேர்தல் காலம் இன்னும் களைகட்டவில்லை. அதற்கு இன்னும் கொஞ்சம் நாளெடுக்கும். தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்துக்கும், தேர்தல் நாளுக்குமிடையில் 50 நாட்கள் இடைவெளி இருந்தமைதான் இதற்குக் காரணமாகும்.

இன்னும் இரண்டு வாரங்கள் கழியும் போதுதான், தேர்தல் காலம் களைகட்டத் தொடங்கும்.

ஆனாலும், திருவிழா அளவுக்கு தேர்தல் காலம் களைகட்டும் என்பதற்கு, நடக்கும் நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.

வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நடந்தவற்றை எல்லாம் வைத்தும் பார்க்கும்போது, தேர்தல் காலம் களைகட்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே தெரிகின்றன.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அரசியல் களம், களைகட்டுவதற்கான அறிகுறிகள் இப்போதே தெரியத் தொடங்கி விட்டன.

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் இறுதித் தினமன்று, முஸ்லிம் காங்கிரஸின் தளம் என்று அறியப்படும் அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஹனீபா மௌலவியும் முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச மத்திய குழு உறுப்பினர்கள் சிலரும், அந்தக் கட்சியிலிருந்து விலகி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள்.

அந்த நிகழ்வு நடந்து நான்கு நாட்களுக்குள், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும், உயர்பீட உறுப்பினருமான கல்முனையைச் சேர்ந்த கே.எம். ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டதாக அறிவித்தார்.

எப்படிப் பார்த்தாலும், தேர்தல் காலமொன்றில் மேற்படி நபர்கள் மு.காவிலிருந்து விலகியமையானது, அந்தக் கட்சிக்கு இழப்புத்தான் என்பதை மறுக்க முடியாது. அதிலும், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாத்தின் விலகலானது மு.காவுக்கு ஜீரணிக்க முடியாததாகவே இருக்கும்.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் ஊரான கல்முனைதான், ஜவாத்துக்கும் சொந்த ஊராகும். முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில், தனது இள வயதிலிருந்தே அஷ்ரப்புடன் நெருக்கமாக இருந்து, கட்சி வளர்ச்சிக்காக ஜவாத் உழைத்தார். முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்பின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்களில் ஒருவராக ஜவாத்தும் இருந்தார்.

நேராகவும், வெளிப்படையாகவும் விமர்சனங்களை முன்வைக்கும் ஒருவராக ஜவாத் அறியப்படுகின்றார். முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமையும் பல தடவை நேருக்கு நேராக ஜவாத் விமர்சித்திருந்தார். அதனால், மு.கா தலைவருக்கும் ஜவாத்துக்கும் இடையில் எப்போதும் நெருக்கமானதோர் உறவு இருந்ததில்லை.

ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், கல்முனையைச் சேர்ந்தவருமான பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அவரின் பிரதேசத்தில் தனிக்காட்டு ராஜாவாக மாறிவிடக் கூடாது என்பதற்காக, மு.கா தலைவருக்கு, ஜவாத் தேவையாகவும் இருந்தார் என்கிற பேச்சும் உள்ளது.

கல்முனையைச் சேர்ந்த ஜவாத்தும் ஹரீஸும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் முக்கியஸ்தர்களாக இருந்தபோதும், அரசியலில் அவர்கள் இருவரும் கீரியும் பாம்புமாகவே இருந்து வருகின்றனர். “கல்முனையில் பிரதியமைச்சர் ஹரீஸை, மு.கா தலைவர் முன்னிலைப்படுத்துவதோடு, என்னை திட்டமிட்டு ஓரம் கட்டுகிறார்” என்று, மிக நீண்ட காலமாகவே ஜவாத் குற்றம் சாட்டி வந்தார்.

இந்தநிலையில், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த எம்.ரி. ஹசன் அலி வெளியேறியபோது, ஜவாத்தும் இணைந்து வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு கட்சிக்குள்ளும் வெளியிலும் இருந்தது.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக ஹசன் அலிதான் இருக்க வேண்டும் என்பதில் ஜவாத் உறுதியாக இருந்தார். ஹசன் அலி வெளியேறிய பிறகும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஜவாத் தொடர்ந்து இருந்தமையைப் பலரும் ஆச்சரியமாகவே பார்த்தனர்.

எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், கட்சிக்குள் ஜவாத் பிடிப்பற்ற ஒருவராகவே இருந்து வந்தார். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து எந்தக் கணத்திலும் ஜவாத் விலகலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது. அது இப்போது நடந்திருக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்ட ஜவாத், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் தனது ஆட்கள் பலரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளராகவும் நிறுத்தியிருக்கின்றார். மேலும், அந்தத் தேர்தலுக்குரிய விகிதாசார வேட்பாளர் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக் கொண்டு, தேர்தல் வேலைகளில் ஜவாத் களமிறங்கியிருக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஜவாத் விலகியதோடு மட்டும் நின்று விடாமல், கல்முனை மாநகரசபைக்கான தேர்தல் களத்தில், அதுவும் முஸ்லிம் காங்கிரஸின் எதிராளிக் கட்சியின் சார்பில் ஒரு வேட்பாளராகக் களமிறங்கியிருப்பது மு.காவுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், கரையோரப் பிரதேசங்களின் உத்தியோகபூர்வமற்ற தலைநகராக கல்முனை உள்ளது. மேலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரபின் சொந்த ஊர் கல்முனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனால், கல்முனை மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதென்பதை, தனக்கான பெருமையாக முஸ்லிம் காங்கிரஸ் கருதுகிறது. கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரஸ்தான் கைப்பற்றியும் வந்துள்ளது. ஆனால், இம்முறை கல்முனை மாநகர சபைக்கான தேர்தல், முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளமையை அவதானிக்க முடிகிறது.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸுக்குப் பாரிய வெற்றியையும், பெருமளவான உறுப்பினர்களையும் பெற்றுக் கொடுப்பதில் சாய்ந்தமருது பாரிய பங்களிப்பைச் செய்து வந்தது.

ஆனால், இப்போது அவ்வாறானதொரு நிலைவரம் அங்கு இல்லை. தங்களுக்கு உள்ளூராட்சி சபையொன்று கிடைக்கும் வரை, எந்தவோர் அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை எனச் சாய்ந்தமருது மக்கள் சார்பாக, அந்த ஊர்ப் பெரிய பள்ளிவாசல் தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளது.

இதையடுத்து கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், சுயேட்சைக் குழுவொன்றை சாய்ந்தமருது பள்ளிவாசல் நிருவாகத்தினர் களமிறக்கியுள்ளனர். இந்த நிலைவரமானது, முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு பேரிடியாகவும் அமைந்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், கல்முனையில் மக்கள் செல்வாக்குள்ள ஜவாத், முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகி, அந்தக் கட்சியின் மிகப்பெரும் பகைமைக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியிருப்பது, முஸ்லிம் காங்கிரஸுக்கு  அடியாக அமைந்து விட்டதாகவே, அரசியலரங்கில் பேசப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அரசியலரங்கில் ஏற்பட்டுள்ள இவ்வாறான மாற்றங்கள், முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமற்ற காரணிகளாகவே அமைந்துள்ளன. இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என அறியப்படுகின்ற அம்பாறை மாவட்டத்துக்குள், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை அந்தக் கட்சி பாரிய சவால்களுடனேயே எதிர்கொள்ள வேண்டி வரும்.

அம்பாறை மாவட்டத் தேர்தல் களத்தில் புறச் சவால்களையே முஸ்லிம் காங்கிரஸ் அதிகம் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால், கிழக்கின் மற்றொரு மாவட்டமான மட்டக்களப்பில் புறத்திலும், அகத்திலும் சவால்களைச் சந்திக்க வேண்டியதோர் இக்கட்டான நிலைக்குள் முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரைச் சேர்ந்தவர். அதே ஊரில்தான் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டும் இருக்கின்றார்.

இருவரும் ஒரே கட்சிக்காரர்கள் என்றாலும், அரசியலில் பகையாளிகள். இதனால், அலிசாஹிர் மௌலானாவும் ஹாபிஸ் நசீரும் இணைந்து, அங்குள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உள்ளூராட்சி சபையொன்றுக்கான தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை இரண்டு கட்சிகள் சார்பில் நிறுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்குள் மு.கா தலைவர் சிக்கியுள்ளார்.

உதாரணமாக, ஏறாவூர் நகரசபைக்கான தேர்தலில், ஹாபிஸ் நசீர் அஹமட், தனது அணியைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், அதே சபைக்கான தேர்தலில் அலிசாஹிர் மௌலானா, தனது அணியைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்களை முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் வேட்பாளர்களாகக் களமிறக்கியுள்ளார்.

அதாவது, இரண்டு நபர்களுக்குள்ள பிரச்சினை காரணமாக, ஓர் உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில், தனது கட்சிக்காரர்களை இரு வேறு சின்னங்களில் களமிறக்க வேண்டிய நிலைவரம் முஸ்லிம் காங்கிரஸுக்கு ஏற்படுள்ளது. கலப்புத் தேர்தல் முறையில், மு.காவுக்கு இது நட்டமாகவே அமையும்.

அலிசாஹிர் மௌலானா தனது அணியினரை வேட்பாளர்களாகக் களமிறக்கியுள்ள முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியானது, முஸ்லிம் காங்கிரஸின் ‘மாற்றுக் குழந்தை’ என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கட்சியின் தலைவர், செயலாளராக முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளின் உறவினர்களே உள்ளனர். ஹாபிஸ் நசீருடன் அரசியலில் ஒத்துப் போக முடியாது என்று கூறி, அலிசாஹிர் மௌலானா தனது அணியினரை வேட்பாளர்களாகக் களமிறக்கியுள்ள முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்கிற கட்சியின் தலைவரே ஹாபிஸ் நசீருடைய சகோதரர் என்பது, இங்கு முரண்நகையான செய்தியாகும்.

இன்னொருபுறம், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தற்போதைய தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தும் மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.

ஹாபிஸ் நசீர், அலிசாஹிர் மௌலானா ஆகியோரைப் போலவே, பஷீர் சேகுதாவூத்தும் ஏறாவூரைச் சேர்ந்தவர். இவரும் தனது கட்சியின் வண்ணத்துப் பூச்சிச் சின்னத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தின் சில சபைகளுக்கான தேர்தல்களில் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பஷீர் சேகுதாவூத், தவிர்க்க முடியாத ஓர் அரசியல் ஆளுமையாவார். முஸ்லிம் காங்கிரஸில் அவர் இருந்தபோது, அந்தக் கட்சியின் மூளையாகச் செயற்பட்டவர். அவ்வாறான ஒருவர் தனது கட்சியில் வேட்பாளர்களைக் களமிறக்கி, மு.காவோடு நேரடியாகப் போட்டியிடத் தயாராக நிற்பது, முஸ்லிம் காங்கிரஸுக்கு அச்சுறுத்தலாகவே அமையும் எனக் கூறப்படுகிறது.

தேர்தலொன்று வரும் போது, கட்சியொன்றின் உள்முரண்பாடுகள் அநேகமாகத் தீர்த்து வைக்கப்படுவதுண்டு. ஒரே கட்சிக்குள்ளிருக்கும் முக்கியஸ்தர்களிடையே உள்ள மனக் கசப்புகள் முடிவுக்குக் கொண்வரப்படுவதை நாம் கண்டிருக்கின்றோம். தேர்தலை வெற்றி கொள்வதற்கு, ஒரு கட்சி எடுக்கும் முதல் முயற்சி அதுவாகவே இருக்கும்.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டுக் களமிறங்கியுள்ளமையானது, அந்தக் கட்சியின் பலவீனத்தையே அம்பலப்படுத்தியுள்ளது. அலிசாஹிர் மௌலானாவுக்கும் ஹாபிஸ் நசீருக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியாத நிலையில் மு.கா தலைமைத்துவம் இருக்கின்றது என்கிற செய்தியும் இங்கு வெளிப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியலில், முஸ்லிம் காங்கிரஸுக்குப் பிரதான பாத்திரமுள்ளது. ஆனால், அந்தக் கட்சியின் அகத்திலும் புறத்திலும் ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக, எதிர்வரும் தேர்தலை மு.காங்கிரஸ் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள முடியாததொரு நிலைவரம் உருவாகியுள்ளதை மறைக்க முடியாது.

இந்த பலவீனங்களிலிருந்து எழுந்து நின்று, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலைச் சந்திப்பதற்கு, மு.காவுக்கு ஓர் ஊன்றுகோல் அவசரத் தேவையாக உள்ளது. அதை எங்கிருந்து, எப்படிப் பெறுவதென்பதை அந்தக் கட்சியின் தலைவர்தான் கண்டறிய வேண்டும்.

ஊன்றுகோலைத் தேடியெடுப்பதென்பது, கனிந்து தொங்கும் ஒரு பழத்தை, மரத்திலிருந்து பறித்தெடுப்பது போல், அத்தனை எளிதான காரியமாக இருக்கப் போவதில்லை.

நன்றி: தமிழ் மிரர் (02 ஜனவரி 2018)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்