பாவங்களை பாவம் என்கிற உணர்வற்று செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவது, நமக்கான அவமானமாகும்: வேட்பாளர் மஹ்தூம்

🕔 January 1, 2018

– அஹமட் –

“உள்ளுராட்சி சபையொன்றின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற்பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழுகையில்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றவர்கள், பாவங்களை – பாவம் என்கிற உணர்வற்றுச் செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவதென்பது நமக்கான அவமானமாகும்” என்று அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், இக்ரஹ் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான மயில் சின்னத்தில் போட்டியிடும் வை.பி. மஹ்தூம் தெரிவித்தார்.

தனக்கான ஆதரவு வேண்டி நடத்தப்பட்ட பொதுமக்கள் சந்திப்பில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“நமக்கு அரசியல் எதற்கு என்று சொல்லி, நம்மிடையே இருக்கும் நல்லவர்களில் கணிசமனோர் ஒதுங்கிக் கொண்டமையினால், நமது அரசியல் இப்போது அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.

யாரோ சிலரின் அரசியலுக்காக, நமது இளைஞர்கள் பலரின் எதிர்காலங்கள் இருளடையச் செய்யப்பட்டுள்ளன.

அழ்ழாஹ்வின் பேரருளைப் பெறுவதற்காக, ஒரு இபாதத் போல செய்ய வேண்டிய அரசியல் பணியானது; அடிதடி, மோசடி, ஊழல் மற்றும் அனாச்சாரங்களால் நிறைந்துபோய் விட்டது.

மக்களுக்கு பணி செய்வதற்காக பெற்றுக் கொண்ட அரசியல் அதிகாரங்களை, நம்மிடையே உள்ள பலர்; தங்கள் உழைப்புக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த உழைப்புக்களும் ஹலாலானதாக இல்லை.
எனவே, நமது அரசியலை பாவங்களிலிருந்து மீட்க வேண்டியுள்ளது. அரசியலை ஒரு இபாதத்தாகவும், மக்களுக்கு மட்டுமேயான பணியாகவும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

அதனைச் செய்து பார்ப்பதற்கான கனவுகளோடுதான், நமது பிரதேச சபைத் தேர்தலில் களமிறங்கியிருக்கிறேன்.

அரசியலின் ஆரம்பமும், அடித்தளமும் உள்ளுராட்சி சபையிலிருந்தே உருவாகிறது. அடித்தளம் சரியாக அமைந்தால், மற்றவை அனைத்தினையும் சரிப்படுத்தி விடலாம்.
நமது பிரதேச சபையில் கடந்த காலங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் கணிசமானோர் பிரதேச சபையின் பணத்திலிருந்தும், பிரதேச சபை உறுப்பினர் எனும் அதிகாரத்தினைப் பயன்படுத்தியும் கொந்தராத்துக்களைச் செய்து கொண்டு, தமது வங்கிக் கணக்குகளைத்தான் நிரப்பிக் கொண்டிருந்தார்கள்.

நமது தெருக்களில் அதிகமானவை இருளடைந்து கிடந்தன, ஏராளமான வீதிகள் பயணிக்கத் தகுதியற்றுக் கிடந்தன, நமது மையவாடிகளுக்குக் கூட வெளிச்சமிருக்கவில்லை.

ஆனால், இது தொடர்பில் நமது பிரதேச சபையிலிருந்த உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கவலைப்படவில்லை. அவர்களுக்கு கவலைப்படவும் நேரமிருக்கவில்லை. கொந்தராத்து வேலைகளில் அவர்கள் மூழ்கிக் கிடந்தார்கள். பணி செய்யச் சென்றவர்கள், பணம் உழைத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியானவர்களை தேர்வு செய்து, பிரதேச சபைக்கு நாம்தான் அனுப்பி வைத்தோம். ஏதோ ஓர் அபிமானத்தில் கண்களை மூடிக்கொண்டு தவறானவர்களுக்கு நாம் புள்ளடியிட்டதன் விளைவினைத்தான் கடந்த காலங்களில் நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம்.

இப்போது நமது காலடிக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தினை காலம் கொண்டு வந்து தந்திருக்கிறது.

எதிர்வரும் பிரதேச சபைத் தேர்தலில் நமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் அதிகாரம் நமது கைகளுக்கு வந்திருக்கிறது. எனவே, இந்த சந்தர்ப்பத்தை கொஞ்சம் சிந்தித்து பயன்படுத்துவோம்.

உள்ளுருாட்சி சபையின் உறுப்பினர் என்பவர், ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாகவும், தலைவராகவும் செயற்பட வேண்யவராவார். அவரின் நடத்தைகள் – நற் பண்புகள் நிறைந்தவையாகவும், மார்க்க அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். தொழுகையில்லாதவர்கள், போதைப் பொருள் பயன்படுத்துகின்றவர்கள், பாவங்களை – பாவம் என்கிற உணர்வற்றுச் செய்து கொண்டிருப்பவர்கள், நமது பிரதிநிதிகளாகத் தெரிவாவதென்பது நமக்கான அவமானமாகும்.

இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி, பாவங்களுக்கு பயப்படுகின்றவர்களால்தான் அரசியலை மக்கள் பணியாகச் செய்ய முடியும் என்று திடமாக நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையுடன் நமது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில், இக்ரஹ் வட்டாரத்தில் – மயில் சின்னத்தில் போட்டியிடக் களமிறங்கியுள்ளேன்.

என்னைப் பற்றி நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள். அரசியலை ஒரு சேவையாகவும், மார்க்கப் பணி போலவும் செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அரசியலை நல்ல நடத்தைகளால் தூய்மைப்படுத்திப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

அந்த நம்பிக்கை உங்களுக்கும் இருந்தால், நமது இக்ரஹ் வட்டாரத்திலிருந்து உங்கள் அரசியல் பிரதிநிதியாக என்னைத் தெரிவு செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

நானும் நீங்களும் கைகோர்த்துக் கொண்டு, நமக்கான ஒரு நல்ல அரசியலை செய்து பார்ப்போம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்