ஹக்கீமின் வருகைக்கு சாய்ந்தமருதில் பாரிய எதிர்ப்பு; மக்களின் ஆவேசம் கண்டு நிகழ்வுகள் ரத்து

🕔 December 24, 2017

– எம்.ஐ. சர்ஜூன் (சாய்ந்தமருது) –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றவூப்  ஹக்கீம், சாய்ந்தமருதில் இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொள்ளவிருந்த இரு நிகழ்வுகள், பொதுமக்களின் பாரிய எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் 02 மணியளவில் சாய்ந்தமருதில் நடைபெறும் தோணா அபிவிருத்தியை பார்வையிடுவதுடன், கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் சாய்ந்தமருதைச் சேர்ந்த வேட்பாளரின் தேர்தல் காரியாலயங்களை திறந்து வைக்கும் நிகழ்விலும் மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவியது.

மக்கள் ஆக்ரோஷம்

இதனை அறிந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் இளைஞர்களும் சாய்ந்தமருது மக்கள் பணிமனை முன்றலில் அணிதிரண்டனர். அங்கு குழுமிய பொதுமக்கள் – சாய்ந்தமருது பிரகடத்தை மீறி நடைபெற ஏற்பாடாகும், குறித்த இரு நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்த வேண்டுமென மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்டனர்.

மேற்படி பதட்ட நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவதற்கும், நிலமையை சுமுகமாக்குவதற்கும் பல முக்கியஸ்தர்கள் தலையீடு செய்தபோதும், பொதுமக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியாது போனது. பொதுமக்கள் பட்டாசுகளை கொழுத்தி வீதிகளில் போட்டதுடன் கறுப்பு கொடிகளையும் ஏந்தியவண்ணம் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன் பின்னர், அங்கு மேலும் பல பொதுமக்களும் இளைஞர்களும் வந்து சேர்ந்ததால் நிலமை மேலும் மோசமடைந்தது. பொதும்கள் அணி திரண்டு, நிகழ்வுகள் நடைபெறவிருந்த தோணா பகுதியை நோக்கி சென்றனர்.

உள்ளே வராதே

தோணாவுக்கு செல்லும் வீதியிலேயே மு.கா. வேட்பாளரின் தேர்தல் காரியாலயம் திறப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த காரியாலத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

குறித்த காரியாலயத்தை அடைந்த பொதுமக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் பட்டாசுகளை கொழுத்தியும் கறுப்புக் கொடிகளை காட்டியும் கோஷங்களை எழுப்பினர். மேலும், “சாய்ந்தமருதுக்கு துரோகம் செய்த அரசியல்வாதிகள் சாய்ந்தமருதுக்குள் நுழையக் கூடாது” என உரத்த குரலில் கோஷமிட்டனர்.

முறுகல்

இதன்போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறு முறுகலும் ஏற்பட்டது.

பின்னர், தோணா பகுதிக்கு விரைந்த பொதுமக்கள், அந்த இடத்தில் குழுமி நின்று தமது எதிர்ப்பினை வெளிறிட்டனர்.

சுமார் ஒரு மணித்தியாலயம் அங்கு கூடி நின்ற பொதுமக்கள்; “சாய்ந்தமருது மக்களையும் பள்ளிவாசல் நிருவாகத்தையும் ஏமாற்றிய அரசியல் தலைவரும் அவருடைய கட்சியின் அரசியல்வாதிகளும் எமது ஊருக்குள் வர ஒருபோதூம் அனுமதிக்கப் போவதில்லை” என, கோஷமெழுப்பினர்.

இறுதியாக முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரது வீடுகளுக்கும், பொதுமக்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்