மு.கா. வேட்பாளர் பிர்தௌஸின் சாய்ந்தமருது வீட்டின் மீது தாக்குதல்; பெருங் கூட்டமாக வந்தோர் கை வரிசை

🕔 December 24, 2017

– முன்ஸிப் –

ல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.எம். பிர்தௌஸின் வீடு மீது, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெருங் கூட்டமாக வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதால், அந்தப் பகுதி சில மணி நேரம் பாரிய படத்துக்குள்ளானது.

இதன்போது பிர்தௌஸின் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வீட்டு வளவினுள் புகுந்து அங்கிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் கிடைக்கும் வரை, எந்தவித அரசியல் கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிருவாகம் முடிவு செய்துள்ளதோடு, கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, சுயேட்சைக் குழுவொன்றினையும் சாய்ந்தமருது பள்ளிவாசல் களமிறக்கியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில்,  சாய்ந்தமருதிலிருந்து மு.காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் பிர்தௌஸ் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகின்றனர்.

இந்தப் பின்னணியிலேயே, பிர்தௌஸின் வீடு மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேற்படி பிர்தௌஸ் – கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சாய்ந்தமருதைச் சேர்ந்த மு.காங்கிரசின் மற்றுமொரு வேட்பாளரான ஏ.சி. எஹ்யான்கானின் அரசியல் அலுவலகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மேற்படி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

சம்பவத்தையடுத்து, தாக்குதலுக்குள்ளான இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்