போதை மாத்திரை கடத்தலின் போது கைதான அக்கரைப்பற்று வேட்பாளர்; பொலிஸாரின் கைகளில் சிக்கியது எப்படி: அம்பலமாகும் உண்மைகள்

🕔 December 22, 2017
ம்பாறையில் வைத்து சுமார் 23,000 ட்ரமடோல் (Tramadol) மாத்திரைகளை  தனது வாகனத்தில் ஏற்றும்போது, பொலிஸாரால் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றபீக் என்பவர் கைது செய்யப்பட்டமை அறிந்ததே.

கைதான மேற்படி நபர், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் நூராணியா வட்டாரத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரிடமிருந்து கைப்பட்டப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகள் ஒவ்வொன்றம் 225mg அளவினைக் கொண்டவையாகும்.

அகப்பட்ட கதை

கண்டியிலிருந்து அம்பாறை நோக்கிப் புறப்பட்ட மினி பஸ் ஒன்றில், நடத்துனரிடம் ஒரு பெட்டி கொடுக்கப்பட்டு அதனை அம்பாறையில் ஒருவர் பெற்றுக்கொள்வார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.பெட்டியில் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கிறீம் வகைகள் இருக்கின்றன என்றும் கூறப்பட்டிருக்கிறது. அம்பாறையில் அந்தப் பெட்டியைப் பெறுபவர் தேசிய காங்கிரஸ் வேட்பாளர் றபீக் என்பதுதான் திட்டம்.

மினி பஸ் – கண்டியிலிருந்து வந்து கொண்டிருக்கும் போது நடத்துனருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட றபீக்; ‘இப்பொழுது எங்கிருக்கிறீர்கள்’ என்று பலமுறை விசாரித்திருக்கிறார். இது நடத்துநருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இதனையடுத்து, பெட்டியை நடத்துநர் உடைத்துப் பார்த்திருக்கிறார். பெட்டி முழுவதும் மாத்திரைகள் இருந்திருக்கின்றன.

கிறீம் இருக்கிறது என்று சொல்லப்பட்ட பெட்டியில், மாத்திரைகள் இருப்பதைக் கண்ட நடத்துநர் பொலிஸாருக்கு அறிவித்திருக்கிறார். குற்றப் புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும், மினி பஸ்ஸில் இருந்த பெட்டியைப் பரிசோதித்தனர். பின்னர் வேட்பாளர் ரபீக் தனது காரில் அவற்றை ஏற்றும் வரைக்கும் காத்திருந்து அவரைக் கைது செய்திருக்கின்றனர்.

விளக்க மறியல்

சந்தேக நபர் றபீக், நேற்று புதன்கிழமை அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்  செய்யப்பட்டார். அவருக்காக சட்டத்தரணி எஸ்.எஸ். அப்பாஸ் ஆஜராகியிருந்தார். தேசிய காங்கிரஸின் பல பிரமுகர்கள் அங்கு வருகை தந்திருந்தார்கள். அவரை காப்பாற்றும் முயற்சிகள் கடுமையாக நடைபெற்றன.

வழமை போல உடல் நலத்தைக் காரணம் காட்டி, சந்தேக நபருக்கு பிணை கேட்கப்பட்டது. குற்றத்தின் பாரதூரத்தைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் பிணையை மறுத்தது. இதில் இன்னும் 04 பேர் தொடர்புபட்டிருப்பதாகவும் மாத்திரைகளுக்குள் இன்னும் வேறு போதை வஸ்துக்கள் இருக்கின்றனவா என்பதை விசாரிப்பதற்காகவும் பொலிஸார் அவகாசம் கேட்டனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் அக்கரைப்பற்று மருந்தகங்களில் புலனாய்வுத் துறையினர் விசாரித்திருக்கின்றனர். நீதிமன்றம் விடுமுறை என்பதாலும் என்பதனாலும், நேற்றுக் கடமையில் இருந்தவர் தற்காலிக நீதிபதி என்பதாலும் எதிர்வரும் டிசம்பர் 26ம் திகதி வரைக்கும் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றத்தின் தன்மை

சந்தேக நபருககு எதிராக 2008ம் ஆண்டின் முதலாம் இலக்க  CONVENTIONS AGAINST ILLICIT TRAFFIC IN NARCOTIC DRUGS AND PSYCHOTROPIC SUBSTANCES  சட்டத்தின் கீழும், 1929 ம் ஆண்டின் பதினேழாம் இலக்க நஞ்சு, ஓபியம் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தின் [POISONS, OPIUM, AND DANGEROUS DRUGS ORDINANCE] கீழும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேற்சொன்ன இரண்டு சட்டகளினூடாக போதைப் பொருள் கடத்துபவர்களும் தண்டிக்கப்டுகிறார்கள். அதே சட்டத்தின் கீழ்தான் சந்தேக நபர் றபீக் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

OPIUM, AND DANGEROUS DRUGS ORDINANCE யின் கீழ் குற்றம் சுமத்தப்படும் ஒருவருக்கு பிணை வழங்கும் அதிகாரம், சாதாரண நீதிமன்றத்திடம் இல்லை. உயர் நீதிமன்றத்துக்கே அந்த அதிகாரம் உள்ளது. காரணம் குற்றத்தின் பாரதூரம் பெரியது. CONVENTIONS AGAINST ILLICIT TRAFFIC IN NARCOTIC DRUGS AND PSYCHOTROPIC SUBSTANCES  எனும் காரணங்களை குறிப்பிட்டு குற்றம் சாட்டப்படும் ஒருவர், குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், ஆகக் குறைந்தது 10 வருடங்களும் கூடியது 15 வருடங்கள் வரைக்கும் சிறைத்தண்டனை விதிக்க முடியும். அது குற்றத்தின் தன்மையினைப் பொறுத்ததாகும்.

சட்டத்தின் நுணுக்கமான ஓட்டைகள், சட்டப்பிரயோகங்கள், நிர்வாக நடைமுறைகள், குற்றம் சுமத்தப்பட்டவரின் சட்டத்தரணினுடைய வாதத்திறமை மற்றும் பல புறக்காரணிகளைப் பயன்படுத்தி சந்தேக நபர் றபீக் தப்பித்தும் கொள்ளலாம்.

ஆனால் தடுக்கப்பட்ட மாத்திரைகளை விற்பதும் அதனால் ஏற்படப்போகும் பாரிய சமூக சீரழிவுகள் குறித்தும் மக்கள் நீதிமன்றின் முன்பாக ஆராயப்பட வேண்டும். நீதிமன்றம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ட்ரமடோல் என்றால் என்ன? ஏன் இது இத்தனை பாரதூரமானது?

ட்ரமடோல் TRAMODOL என்பது ‘OPIOIDS’ குழுமத்தைச் சார்ந்தது. OPIUM த்தின் MOLECULE STRUCTUREக் கொண்டு செய்யப்பட்ட மருந்து வகையை OPIOIDS என்பார்கள். நடுத்தர மற்றும் உக்கிர வலி நிவாரணியாக இது இலங்கையில் வழங்கப்படுகின்றது.

இது SHEDULE 2B வகையைச் சார்ந்த ‘PRESCRIPTION ONLY CONTROLLED DRUG’ ஆகும். அதாவது, மருத்துவரின் சிட்டை இன்றி, இந்த மாத்திரைகள் இருந்தால் மட்டுமே, இந்த மாத்திரையை வழங்க முடியும். இது SHEDULE C வகையைச் சேர்ந்த NARCOTICS DRUG அல்ல. இதனை அந்தத் தரத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள்  இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் Kentucky மற்றும் VERGINIA மாநிலங்களில் இது NARCOTIC DRUG ஆக தரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது 2B வர்க்கத்தைச் சேர்ந்த மருந்தாக இருந்தாலும் இதனைப் பெறுவதற்கு மிகவும் இறுக்கமான நடைமுறை காணப்படுகின்றது. இதனை சாதாரண மருந்தகங்களில் விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இலங்கை மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விற்பனை முகவரான ‘ஒசுசல’ வில் மாத்திரமே இது விற்பனைக்குண்டு. இதனை வாங்குவதற்கு வைத்தியரின் PRESCRIPTION மற்றும் முத்திரை அவசியம். என்றாலுல் 225MG மாத்திரைகள் இலங்கையில் பதிவு செய்யப்படவே இல்லை. அதி உச்சமாக 100mg மாத்திரைகள்தான் இலங்கையில் உள்ளன. சந்தேக நபர் வைத்திருந்தவை 225mg மாத்திரைகளாகும்.

ட்ரமடோல் மாத்திரைகளை தொடர்ச்சியாகப் பாவிக்கும் போது, மூளை பழக்கமடைந்து அதற்கு அடிமையாகும். அதாவது[DEPENDANCY நிலை ஏற்படும். போதைப் பொருளைப் பாவிப்பவருக்கும் இந்த நிலையே ஏற்படுகிறது. இதனை பின்னர் கைவிட்டால், போதைப் பொருளைக் கைவிட்டவருக்கு ஏற்படும் உடல் நடுக்கம், நெஞ்சு படபடத்தல் மற்றும் உடல் நோவு போன்ற  WITHDRAWAL FEATURES உருவாகும்.

இப்பொழுது விடயத்திற்கு வருவோம்

மிகவும் இறுக்கமான சட்ட திட்டங்களைக் கொண்ட ட்ரமடோல் (TRAMODOL) மாத்திரைகள் எப்படி சந்தேக நபர் றபீக்கின்  கைகளுக்கு பாரிய எண்ணிக்கையில் கிடைத்தன?

ட்ரமடோல் மாத்திரைகள் TRAMODOL இந்தியாவில் இருந்து படகுகள் மூலம், நீர்கொழும்பு வாயிலாக இலங்கைக்கு கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இவ்வகையான கடத்தல்கள் அனைத்தும் கடல் மார்க்கமாகத்தான் நடைபெறுகிறன. இவ்வாறு கடத்தப்படும் மாத்திரைகள் – முகவர்கள் மூலம் மருந்தகங்களுக்கு விற்கப்படுகின்றன. சந்தேக நபர் றபீக் உட்பட இன்னும் மூன்று நான்கு முகவர்கள் அக்கரைப்பற்றிலும் ஏனைய பிரதேசங்களிலும் இதனை விற்பனை செய்கிறார்கள்.

TRAMODOL ஒசுசலவில் நான்கு ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. சந்தேக நபர் றபீக் அக்கரைப்பற்றில் ஒரு TRAMODOL மாத்திரையை  50 ரூபாய்க்கு விற்பதாக கூறப்படுகிறது. அதனை மருந்தகங்கள் 100 – 125 ரூபா வரைக்கும் விற்கின்றன. றபீக் கொண்டுவந்த இந்த மாத்திரைகள் பிடிபடாமல் விற்கப்பட்டிருந்தால், சுமார் 23 லட்சம் இதன் மூலம் லாபம் அடைந்திருப்பார்.

TRAMADOL ஒசுசலவில் மாத்திரம்தான் இருக்கின்றன என்பதும், உள்ளூர் தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுவது தடை என்பதும் எல்லா வைத்தியர்களுக்கும் தெரியும். அப்படி இருக்க, ஏன் மருந்தகங்கள் இதனை வாங்குகின்றன?

பணத்தாசைக்காக  இதனை மருந்தகங்கள் சட்ட விரோதமாக விற்கின்றன. இதன் மூலம் நல்ல லாபங்கள் ஈட்டுகின்றன. மூட்டு வலி, முதுகு வலி என்று நேரடியாக வருபவர்களுக்கும்; அக்கரைப்பற்றிலும், வெளியூர்களிலும் போதைக்கு அடிமையானவர்கள் நேரடியாக மருந்தகங்களுக்குச் சென்று மூட்டு வலி என்று சொல்லியும் இதனை வாங்குகிறார்கள்.

அண்மையில் அக்கரைப்பற்றில் பாடசாலையொன்றில் ஒரு மாணவன் தடுக்கப்பட்ட மாத்திரையோடு பிடிபட்டிருக்கிறான். அவனது கைகளில் இருந்ததும் தடுக்கப்பட்ட மாத்திரை என்பதையும் இவ்விடத்தில் நாம் நினைவு கூர வேண்டும்.

எப்படி கடத்தப்படுகின்றன

கடல் மார்க்கங்களால் களவில் கொண்டுவரப்படும் இவ்வகையான மாத்திரைகள் சரியாகப் பொதி செய்யப்படாமலும், மாத்திரைகளைக் கொண்டுவருவதற்கான சரியான போக்குவரத்து முறைகளைப் பின்பற்றாமலும் கொண்டுவரப்படுவதால், அதனை உட்கொள்பவருக்குப் பாரிய பிரச்சினைகளும் ஏற்படும் சந்தர்ப்பங்கள் உள்ளன.

சில முக்கியமான விடயங்களை நாம் இங்கு கவனிக்க வேண்டும்

போதை வஸ்துப் பாவனை அக்கரைப்பற்றில் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது என்பது  எல்லோரும் அறிந்த விடயம். வெறும் பண லாபங்களுக்காக DEPENDENCY நிலைக்கு கொண்டு வரக்கூடிய, பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகளை மிகவும் சாதாரணமாக விற்பது எவ்வளவு விபரீதமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டத்தினால் மிகவும் இறுக்கமான விதிமுறைகளைக் கொண்டுள்ள இம்மாத்திரையை, கடல் மார்க்கமாகக் கடத்திக் கொண்டு வந்து எமது பிரதேசங்களில் விற்பது எத்தனை விபரீதமானது.

சட்ட ரீதியற்ற முறையில் இம்மாத்திரைகளை வாங்குபவர்கள் – என்ன நோக்கத்திற்காக வாங்குகிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், லாப நோக்கத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு விற்கும் எமதூரின் மருந்தகங்கள் மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை.

எரியும் நெருப்பில் எண்ணெய்

முஸ்லிம்கள் போதைப் பொருள் கடத்துபவர்கள் என்ற ஒரு பார்வை ஏலவே சிங்கள சமூகத்திடம் இருக்கிறது. இப்படியான நிலையில் ஏதாவது ஒன்றைப் பெரிதுபடுத்தக் காத்திருக்கும் அவர்களுக்கு இது போன்ற சம்பவங்கள் – எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுபவையாக அமைந்து விடுகின்றன.  இந்த டரமடோல் விவகாரமும் அம்பாறையில் சுவரொட்டி வடிவில் அரங்கேறியிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் மீதும், அக்கரைப்பற்று ஊரின் மீதும் ஒரு பாரிய இழுக்கை ஏற்படுத்தும் விடயமாகவும் இது மாறியிருக்கிறது.

அத்தோடு மிக முக்கியமான விடயம் என்னவென்றால், றபீக் என்பவர் ரிந்துள்ளதாகக் கூறப்படும் குற்றத்தையும் தனி மனிதர் ஒருவரின் மானம் தொடர்பானதாகப் பார்க்கப்படக் கூடாது. மேலும், அவர் ஒரு வேட்பாளராக உள்ளமையினால் பொது வாழ்க்குள் வந்துள்ளார். அதனால் அவர்  ஒரு தனி மனிதனும் அல்லர்.

கபே கண்டனம்

இவர் தேசிய காங்கிரசின் நூராணியா வட்டார வேட்பாளராவார். இதன் காரணமாக, ‘நீதியானதும்,சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம்’ (CAFFE) இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துமுள்ளது.( HTTP://WWW.CAFFESRILANKA.ORG/MORE-4A-10458-2.HTML).

வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறும் கட்சிகளை கபே வேண்டியுள்ளது. இது தேசிய காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள பெரிய இழுக்காகும்.

மக்களைப் பாதிக்கக் கூடிய, இந்தியாவில் இருந்து கடத்தபட்டு வரும் மாத்திரைகளை சட்டரீதியற்ற முறையில் அக்கரைப்பற்றுக்குக் கொண்டு வந்து, அதனால் வரும் விளைவுகள் எதனையும் கருத்தில் கொள்ளாது, லாபத்துக்காக விற்று – வருமானம் ஈட்டும் ஒருவரை நூரானியா மக்கள் – தங்கள் தலைவராகத் தெரிவு செய்திருந்தால், நிலை என்னவாகியிருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அதிகாரம் இல்லாத தனிமனிதனாக இருக்கும் போதே, சொந்த ஊருக்கும் சமூகத்துக்கும் மிகப் பெரும் அநீதியை இழைக்க தயங்காத இவர்களின் கைகளில் அதிகாரம் கொடுக்கப்பட்டால் என்னவாகும் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.

இந்தப் பாரிய குற்றத்தை இழைத்த ஒருவர் தமது கட்சிக்காரர் என்பதற்காக அச்செயலை நியாயப்படுத்தும் கட்சியின் கேவலமான அடிவருடிகள் வாழும் சமூகத்தில் நாமும் வாழ்கிறோம் என்று எண்ணும் போது, மனம் வேதனைப்படுகிறது.

மக்களின் கண்மூடித்தனம்

நாம் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டுவரும் விடயம் இதுதான். எமது கட்சி, எமது சின்னம், எமது தலைவன் என்ற கண்மூடித்தனமான அபிமானங்கள் கொண்ட மக்கள்தான் நாம் என்பதைப் புரிந்து கொண்ட அரசியல்வாதிகள்; தமக்கு வாசியான, தமக்கும் தம் குடும்பத்திற்கும் விசுவாசமாக வாலை ஆட்டும், தமது தேர்தலுக்கு பணத்தை வாரி இறைக்கும் நபர்களை – அவர்கள் எத்தனை கெட்டவர்களாக இருந்தாலும் வேட்பாளர்களாக நியமிக்கின்றார்கள்.

இந்தத் தவறு நடப்பதற்கு இடமளிப்பவர்கள் மக்களாகிய நாம்தான். அரசியல்வாதிகளிடம் நாம் நல்லதை எதிர்பார்ப்பதற்கு முன்னர், நாம் நல்லவர்களை அரசியல்வாதிகளாக்க முயல வேண்டும்.

கட்சி மோகத்தை விட்டு நாம் முதலில் வெளிவர வேண்டும். எம்மை ஆள்வதற்கு இவர் தகுதியானவரா என்பதை முதலில் வட்டார மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அதை விடுத்து, கட்சி அபிமானத்துக்காக வாக்களுக்கும் சமூகமாக நாம் இருக்கும் வரைக்கும் எமக்கு விடிவு கிடையாது.

றபீக் எப்படிப்பட்ட வேட்பாளர் என்பதை அல்லாஹ் எம் மக்களுக்கு காட்டியிருக்கிறான். இப்படி எத்தனை பிழையான வேட்பாளர்களுக்கு நாம் வாக்களிக்கப்போகிறோமோ தெரியாது.

தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள்.

இப்போது சொல்லுங்கள், இது தனிமனிதன் ஒருவரின் தனிப்பட்ட விவகாரமா?

ஆசிரியர் குறிப்பு: இந்த பதிவை அனுப்பி வைத்தவர், தன்னை அடையாளம் காட்ட வேண்டாம் எனக் கோரியமைக்கு அமைவாக, அவரின் பெயரை நாம் இங்கு குறிப்பிடவில்லை. ஆனாலும், சந்தேக நபரின் பெயரும், அவரை வேட்பாளராக நிறுத்தியிருக்கும் கட்சியின் பெயரும் இங்கு நேரடியாக குறிப்பிடப்பட்டிடுள்ளமையினால், இந்த பதிவு தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் இருக்குமாயின், அதனை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

அவற்றின் தரம், உண்மைத்தன்மையினை கருத்திற்கொண்டு வெளியிடத் தயாராக உள்ளோம்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்