உள்ளுராட்சித் தேர்தலின் போது, கிழக்கில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும்; இம்ரான் மஹ்ரூப்

🕔 October 20, 2017

திர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி  தனித்து போட்டியிடுவதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

திருகோணமலை கட்சி முக்கியஸ்தர்களுடன் இன்று வெள்ளிகிழமை மாலை அவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

“கிழக்கு மாகாணத்தில் 1989 வரை ஐக்கிய தேசியக் கட்சிதான் தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்து வந்தது. ஆனால் அன்று முஸ்லிம் காங்கிரசுடன் எமது கட்சி செய்து கொண்ட ஒப்பந்தமே கிழக்கில் குறிப்பாக அம்பாறையில் எமது கட்சியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதன்பின்னர் நாம் பெரும்பாலும் எதிர்க்கட்சியா காணப்பட்டமையால் இந்த சரிவிலிருந்து எமது கட்சியை மீட்டெடுப்பதில் தோல்வி கண்டிருந்தோம்.

ஆனாலும் நல்லாட்சி ஏற்பட்டதில் இருந்து கட்சியை கிழக்கில் மீள கட்டியெழுப்ப பல செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். இதன்பயனாக, பலர் இன்று கிழக்கில் தமது தாய் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன்  இணைந்துள்ளனர்.

இவ்வாறான சந்தர்பத்திலேயே நாம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம். திருகோணமலையை பொறுத்தவரை நாம் தனித்து போட்டியிட்டே முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அனைத்து சபைகளையும் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள சபைகளில் அதிக உறுப்பினர்களையும்  கைப்பற்றலாம். அத்தோடு அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சபைகளில் அதிக அங்கத்தவர்களை பெறலாம்.

ஆகவே கிழக்கு மாகாணத்தில் தனித்து போட்டியிடுவதே எமது கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு வழி அமைக்கும். இருந்தாலும் வழமை போன்று யானையின் முதுகில் சவாரி செய்ய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.

இக் கட்சிகள் திட்டமிடுவது போன்று, இவர்களுடன் எமது கட்சி கூட்டணி அமைத்தால் 1989 இல் அம்பாறையில் எமது கட்சிக்கு ஏற்பட்ட நிலையே, எதிர்காலத்தில் கிழக்கு மாகாணம் முழுவதும் ஏற்படும். இதை தடுத்து கிழக்கில் மீண்டும் தனிப்பெரும் கட்சியாக ஐக்கியதேசிய கட்சியை மாற்றியமைக்க நாம் தனித்து போட்டியிடுவதே சிறந்தது.

இது தொடர்பாக  எமது தலைவர் ரணில் விக்ரமசிங்க , பொதுச்செயலாளர் கபீர் காசிம் மற்றும்  கட்சி செயற்குழுவுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகின்றோம். கிழக்கில் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதால் எமது கட்சிக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து வருகிறோம். விரைவில் இது தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றினை கட்சி எடுக்கும்.

நான் இவ்விடத்தில் முஸ்லிம் கட்சிகளுக்கு சவால் விடுகிறேன். முடிந்தால் யானையின் முதுகில் சவாரி செய்யாமல் தனித்து போட்டியிட்டு திருகோணமலையில் ஒரு சபாயையாவது கைப்பற்றி காட்டுங்கள்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்