ரோஹிங்ய அகதிகள் மீதான தாக்குதல் விவகாரம்: தலை மறைவாகியிருந்த தேரர், பஸ்ஸில் பயணிக்கும் போது கைது

🕔 October 20, 2017

ல்கிஸ்ஸ பிரதேசத்தில் ரோஹிங்ய அகதிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த அரம்பபொல ரத்னசார தேரர், இன்று வெள்ளிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து, சிறப்பு பொலிஸ் அணியினரால் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த தேரர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கைது செய்யப்பட்ட தேரரிடம் இரண்டு தேசிய அடையாள அட்டைகள் காணப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று – தேரராகுவதற்கு முன்னர் எடுக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

ரோஹிங்ய அகதிகள் மீது தாக்குதல் நடத்தியவுடன் தலைமறைவாகிய தேரரைக் கைது செய்யும் பொருட்டு, பொதுமக்களின் உதவியினை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நாடியிருந்தது. குறித்த தேரர் – சுமார் ஒரு மாத காலமாக, தலை மறைவாகியிருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மேற்படி தேரரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், தேரர்  – தலை மறைவாக இருப்பதற்கு உதவியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்