திசைகளின் திருமணம்

🕔 October 10, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

ந்தப் புள்ளியில் முரண்பாடுகளின் தொடக்கம் ஆரம்பிக்கும் என்று நாம் அனுமானித்திருந்தோமோ, கிட்டத்தட்ட அந்தப் புள்ளியை அடைந்து விட்டோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுகளின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருப்பதா, பிரிந்திருப்பதா என்பதைத் தீர்மானிப்பதில்தான் இந்தத் தேசம் திணறப் போகிறது என்பதை, அவ்வப்போது இந்தப் பத்தியில் எழுதி வந்திருக்கின்றோம். இப்போது அந்த அனுமானங்கள் நிகழ ஆரம்பித்திருக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வாக, புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கை ஒன்றை, அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் முக்கிய செயற்பாடாக புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் யோசனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றை அடைப்படையாகக் கொண்டுதான், இறுதி வரைபு உருவாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

நிலைப்பாடுகள் 

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் நிலப்பிரதேசங்களாகும். வடக்கில் தமிழர்களும் கிழக்கில் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

இந்த நிலையில், இணைந்த வடக்கும் கிழக்கும்தான் தமது தாயகப் பிரதேசம் எனத் தமிழர்கள் கூறி வருகின்றனர். அதிலிருந்துதான், இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பது பெரும்பான்மைத் தமிழர்களின் கோரிக்கையாகும்.

இதன் அடிப்படையில்தான் புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. ‘வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக அமைதல் வேண்டும்’ என்று, இடைக்கால அறிக்கையில் த.தே.கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதில் தமிழர் தரப்பு எந்தளவு உறுதியாக உள்ளதோ, அதுபோலவே, வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்பதில் கிழக்கிலுள்ள முஸ்லிம்களும் உறுதியாக உள்ளனர். இதுதான் உண்மை நிலைவரமாகும்.

இந்த உண்மையை மறைக்க முடியாது. காயத்தைக் காட்டினால்தான், அதற்குரிய சிகிச்சைகள் குறித்து யோசிக்க முடியும் என்பதால், சில கசப்பான உண்மைகளை பதிவு செய்தல் அவசியமாகிறது.

பின்னணிக் கதை  

தனித்தனியாக இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 1987ஆம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக, தற்காலிகமாக இணைக்கப்பட்டது. அப்போது தனியாக இருந்த கிழக்கு மாகாணத்தில், முஸ்லிம்களின் சனத்தொகை வீதம் 30 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டபோது, முஸ்லிம் மக்களின் சனத்தொகை 17 சதவீதமாக வீழ்ந்து போனது.

மேலும், முஸ்லிம்கள் பற்றி அந்த ஒப்பந்தத்தில் எதுவும் பேசப்படவில்லை. அதனால், இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை ‘முஸ்லிம்களின் முதுகில் எழுதப்பட்ட அடிமைச் சாசசனம்’ என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்போது கடுமையாக விமர்சித்திருந்தது.

வடக்கும் கிழக்கும் தனித்திருந்த காலங்களை விடவும், இரண்டு மாகாணங்களும் இணைந்திருந்த போதுதான் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவில், பாரிய விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. தமிழர்களின் ஆயுதமேந்திய இயக்கங்களால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபையில் தமக்கு அநீதியிழைக்கப்படுகிறது என்கிற கோசம், முஸ்லிம்களிடமிருந்து அப்போது எழுந்தது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பகைமை முற்றியது.

இணைந்திருந்த வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள், தமது அதிகாரத்தின் கீழிருந்த முஸ்லிம்களை, இறுக்கி அணைக்கத் தவறி விட்டார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.

இதன் விளைவு, சிங்களப் பெரும்பான்மை அதிகாரத்தின் கீழ், வாழ முடியாது என்கிற முடிவுக்குத் தமிழர்கள் வந்திருந்ததைப் போல், தமிழர்களின் அதிகாரத்தின் கீழ் தங்களால் வாழ முடியாது என்கிற முடிவுக்கு, கிழக்கு முஸ்லிம்கள் வந்தனர். முஸ்லிம்கள் தம்மை ஒரு தேசியமாகவும், இனத்துவ சமூகமாகவும் கட்டமைத்துக் கொள்வதற்கான உயர்ந்தபட்ச அழுத்தம், இந்தக் காலகட்டத்தில்தான் ஏற்பட்டது.

தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கும்  கிழக்கும் 2008ஆம் ஆண்டு, நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றின் மூலம் பிரிக்கப்பட்டதை, கிழக்கு முஸ்லிம்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். தாம் அடிமைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றதாக அவர்கள் உணர்ந்தனர். இதையடுத்து, கிழக்கு மாகாண சபையும் வடக்கு மாகாண சபையும் உருவாகின. வடக்கும் கிழக்கும் தனித்தனி ஆட்சியின் கீழ் வந்தன.

கசப்புகள்  

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்பது தமிழர்களின் கோரிக்கையாகும். ஆனால், அதற்கு முஸ்லிம்கள் இணங்க மாட்டார்கள் என்பதை தமிழர் தரப்பு நன்கு அறியும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளும் பகைமையுமே அதற்கான காரணங்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

ஆயினும், முஸ்லிம்களிடமுள்ள மனக்கசப்புகளையும் பகைமை உணர்வுகளையும் களைவதற்கான செயற்பாடுகள் எவற்றையும் தமிழர் அரசியல் தலைமைகள் இதுவரையில் மேற்கொள்ளவில்லை. இதை, இந்தப் பத்தியில் முன்னரும் சுட்டிக்காட்டியிருந்தோம்.

தமிழர்களிடம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பகைமையை இல்லாமல் செய்வதென்றால், சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்களிடம் சென்று, இரண்டு இனங்களுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்கும் செயற்பாடுகளில் ஆகக்குறைந்தது தமிழர் அரசியல் தலைமைகள் ஈடுபட வேண்டும்.

ஆனால், அது நிகழவேயில்லை. பதிலாக, முஸ்லிம்களின் அரசியல் தலைவர்களிடத்தில் கூட்டாளித்தனத்தை ஏற்படுத்துவதன் மூலம், முஸ்லிம்களையும் தமிழர்களையும் நல்லுறவாக்கி விடலாம் என்று, தமிழர் அரசியல் தலைவர்கள் நினைக்கின்றார்கள். இது மிகப் பெரும் தப்புக்கணக்கு என்பதை, தமிழர் அரசியல் தலைமைகள் உணரும் நாள் நெருங்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

தடைகள்  

வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாணமாக அல்லது மாநிலமாக அமைந்திருத்தல் வேண்டுமென்கிற கோரிக்கையை, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், இது உள்ளிட்ட தமது மூன்று கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கினால்தான், புதிய அரசமைப்பின் இறுதி வரைபுக்குத் தமது ஆதரவு கிடைக்கும் என்று, த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருக்கின்றார்.

ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை அரசாங்கம் நினைத்த மாத்திரத்தில் இணைத்து விட முடியாது என்பதை சிரேஷ்ட சட்டத்தரணி சுமந்திரனும் நன்கு அறிவார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதென்றால், அதற்குச் சில முக்கிய தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசமைப்பின் அடிப்படையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதாயின், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

ஆனால், புதிய அரசமைப்பினூடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பதாயின், புதிய அரசமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்வதோடு, சர்வஜன வாக்கெடுப்பொன்றிலும் வெற்றி பெறுதல் அவசியமாகும். இவை, அத்தனை எளிதில் தாண்டக் கூடிய தடைகளல்ல.

எதிர்ப்புகளும், சார்புகளும்  

முஸ்லிம் அரசியல்வாதிகளில் அநேகமானோர், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு எதிரான மனநிலையைத்தான் கொண்டுள்ளனர். அதேவேளை, முஸ்லிம்களின் அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவையும் இணைவுக்கு எதிரானவையாகவே உள்ளன.

உதாரணமாக, வடக்கும் கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமை வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் ‘தனித்த கிழக்கு’ எனும் நிலைப்பாட்டில் மிகத் தீவிரமாக உள்ளது. அதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.

இவ்வாறானாதொரு நிலையில், “வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவு எனும் விடயத்தில் வெட்டொன்று துண்டு இரண்டாக முடிவுகளை எடுக்க முடியாது” என்று, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளமை கவனத்துக்குரியது. மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைகின்றபோது, முஸ்லிம்களுக்கான தனியலகு அமையப்பெற வேண்டும் என்றும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், “வடக்கும் கிழக்கும் இணைவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரும், பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றார்.

அரச தொலைக்காட்சியொன்றில் இதைப் பகிரங்கமாகத் தெரிவித்த பிரதியமைச்சர் ஹரீஸ், கல்முனையில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தார்.

வடக்கு, கிழக்கு தொடர்பான பிரதியமைச்சர் ஹரீசின் இந்த முடிவானது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் நிலைப்பாட்டுடன் முரண்படவும், முட்டி மோதவும் தொடங்கியுள்ளது.

இதையடுத்து, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு இது தொடர்பில் ஒரு விடயத்தைத் தெரிவித்துள்ளார். “வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்ப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் கூறியிருப்பது, மு.காங்கிரஸின் நிலைப்பாடல்ல” என்று, ஹக்கீம் கூறியிருக்கின்றார்.

அரச ஊடகம் ஒன்று இதைச் செய்தியாக வெளியிட்டுள்ளது. இருந்தபோதும், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான நிலைப்பாட்டுடன்தான் பிரதியமைச்சர் ஹரீஸ் தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹரீசும் ஹக்கீமும், உள்ளக முரண்பாடும்  

இவ்வாறானதொரு நிலையில், வடக்கு, கிழக்கு இணைப்புக்கு ஆதரவானதொரு நிலைப்பாட்டை மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் எடுப்பாராயின், முஸ்லிம் காங்கிரஸுக்குள் அதற்கு எதிரான குரல்கள் எழும் என்பதற்கு, அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் ஹரீசினுடைய எதிர்ப்பு இப்போதே கட்டியம் கூறுவதாக உள்ளது. இதனை மு.கா தலைவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் பிரிவுகளால் முஸ்லிம் காங்கிரஸுக்குள் பாரிய சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், வடக்கு,கிழக்கு விவகாகரம் தொடர்பிலும் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படுமாயின், அது மு.காவை இன்னும் பலவீனமாக்கி விடும் என்கிற நிலைவரமும் ஒருபுறம் உள்ளது.

மக்களின் பாதை  

வடக்கு கிழக்கு இணைவுக்கு ஆதரவாக சிங்கள ஆட்சியாளர்களும், முஸ்லிம் காங்கிரஸும் கைகளை உயர்த்தினாலும், வடக்கு, கிழக்கு இணைப்பை உள்ளடக்கிய புதிய அரசமைப்பு ஒன்றுக்கான அங்கிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்படும் சர்வஜன வாக்கெடுப்பில், சிங்கள மக்களும் முஸ்லிம்களும் தமது அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாக உள்ளன.

வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் சிங்கள மற்றும் முஸ்லிம் அரசியல் தலைமைகளை, அவர்கள் சார்ந்த சமூகங்கள் துரோகிகளாகவே பார்க்கும்.

இந்த யதார்த்தத்தைத் தமிழர் தரப்புப் புரிந்து கொள்ளும் போதுதான், தனது நகர்வுகளைச் சரியான வழியில் எடுத்து வைக்க முடியும்.

இன்னொருபுறம் வடக்கு, கிழக்கு இணைப்பு விவகாரத்தில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பகைமையுணர்வு இன்னும் அதிகரிக்கும் நிலைவரம் உருவாகலாம்.

ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணம் என்கிற தமது தாயகக் கோரிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டை முஸ்லிம்கள் எடுக்கும்போது, முஸ்லிம்களை தமிழர்கள் துரோகிகளாகவே தொடர்ந்தும் பார்க்கத் தொடங்குவார்கள். இந்த நிலைவரத்தை கையாள்வதென்பது பெரும் சிரமமாகவே இருக்கும்.

போலி உறவு  

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மிகப்பெரும் பிளவுகள் இருக்கையில், அவற்றைச் செயற்கைத்தனமாக நாம் மறைத்து வந்திருக்கின்றோம். ‘தமிழர்களும் முஸ்லிம்களும் இன்னும் பிட்டும் தேங்காய்ப்பூ போலவும் நட்புடன் கலந்து உள்ளனர்’ என்று, போலியாக – யாரோ சிலரைத் திருப்திப்படுத்துவதற்காக, நம்மிடையே இருக்கின்ற சிலர், போலியாக பேசியும் எழுதியும் வந்திருக்கின்றார்கள்.

இரண்டு சமூகங்களுக்குமிடையில் இருக்கும் காயங்களைக் காட்டி, அவற்றுக்கு மருந்திடாமல் மறைத்துக் கொண்டு வந்திருக்கின்றோம். அதன் பலன், இப்போது அந்தக் காயம் பருத்து, சீழ் பிடித்து, நாறிப் போயுள்ளது. இந்தப் புண்களை அத்தனை சீக்கிரத்தில் ஆற்றிவிட முடியாது.

இப்படியானதொரு சூழ்நிலையில், வடக்குக்கும் கிழக்குக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றி யோசிப்பது எங்ஙனம் சாத்தியமாகும்? வடக்கு என்பது தமிழர்களை அடையாளப்படுத்துவதாகவும் கிழக்கு முஸ்லிம்களைக் குறிப்பதாகவும் உள்ளது.

இரண்டு சமூகங்களுக்குள்ளும் இத்தனை காயங்களையும் வலிகளையும் வைத்துக் கொண்டு, இரண்டு திசைகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைப்பதே யதார்த்தத்துக்கு பொருத்தமில்லாததாகும்.

வடக்கும் கிழக்கும் முதலில் பகைமை மறக்க வேண்டும்; இரண்டு திசைகளுக்குமிடையில் புன்னகைகள் பூக்க வேண்டும்; இரண்டு திசைகளும் பேசிப் பழக வேண்டும்; காதல் மலர வேண்டும்; அதன் பிறகுதான் திருமணம் பற்றிச் சிந்திக்க முடியும்.

இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, நடத்தும் கட்டாயக் கல்யாணம், நிலைத்திருக்குமென்று நீங்கள் நம்புகிறீர்களா?

நன்றி: தமிழ் மிரர் (10 ஒக்டோபர் 2017) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்