ஆசிரியர் இடமாற்ற விவகாரம்; அட்டாளைச்சேனை சமூகம் ஆர்ப்பாட்டத்துக்கு தயார்: அவகாசம் கோரினார் வலயக் கல்விப் பணிப்பாளர்

🕔 October 9, 2017

– அஹமட் –

ட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்குச் செல்லுமாறு பொத்துவிலில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை, தான் தீர்த்து வைப்பதாகவும், அதற்கு மூன்று நாள் அவகாசம் வழங்குமாறும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அகமட் லெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொத்துவிலில் இருந்து இடமாற்றம் பெற்று அட்டாளைச்சேனை பாடசாலைகளுக்கு வருகை தந்த சுமார் 28 ஆசிரியர்களின் இடமாற்றத்தினை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக புதிதாய் பதவியேற்றுள்ள அகமட் லெப்பை ரத்துச் செய்திருந்தார். மேலும், அட்டாளைச்சேனை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை சீர் செய்யும் முகமாக, அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையில் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களும் வழங்கப்பட்டிருந்தன. அவற்றினையும் புதிய பணிப்பாளர் ரத்துச் செய்துள்ளார்.

இதன் காரணமாக, அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளின் கல்வி நிலையில் பாரிய வீழ்ச்சி ஏற்படலாம் எனும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரம் தொடர்பான கலந்துரையாடலொன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சமூக அக்கறையாளர்கள், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

மேற்படி ஆசிரியர்களின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டமை காரணமாக அட்டாளைச்சேனையிலுள்ள பாடசாலைகளின் கல்வி நிலை பாதிக்கப்படும் என்று, இந்தக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டதோடு, குறித்த ஆசிரியர்களின் இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் இதில் கலந்து கொண்ட பிரதேச ஆர்வலர்கள் தமது விசனங்களையும் வெளியிட்டனர்.

இந்த நிலையில், மேற்படி கலந்துரையாடல் நடைபெறுவதை அறிந்து கொண்ட அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அகமட் லெப்பை, குறித்த கலந்துரையாடலில் தானும் கலந்து கொள்ள வேண்டுமென விருப்பம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, வலயக் கல்விப் பணிப்பாளரும் அந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டார்.

இதன்போது, அட்டாளைச்சேனைக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்களை ரத்துச் செய்தமை தொடர்பில் தமக்குள்ள அதிருப்தியினை  வயலக் கல்விப் பணிப்பாளர் முன்னிலையில் அங்கிருந்தவர்கள் வெளிப்படுத்தினர்.

மேலும், இது தொடர்பில் அட்டாளைச்சேனையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் ஒன்று திரட்டி, பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை தாங்கள் மேற்கொள்ளப் போவதாகவும், வயலக் கல்விப் பணிப்பாளரிடம் அங்கிருந்தவர்கள் கூறினார்.

இதனையடுத்து, தனக்கு மூன்று நாட்கள் – கால அவகாசம் வழங்குமாறு கோரிய அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அகமட் லெப்பை; அதற்குள் நல்லதொரு தீர்வினை வழங்குவதாக உறுதியளித்தார்.

தொடர்பான செய்தி: பந்தாடப்படும் ஆசிரியர்கள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கூத்தும், குரோதமும்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்