லலித், அனுஷ சிகிச்சை பெறும் இடத்தில் தேடுதல்; கைத்தொலைபேசி, சிம் அட்டைகள் சிக்கின

🕔 September 13, 2017

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சிலைச்சாலை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் ஏராளமான ‘சிம்’ அட்டைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த நோயாளர் விடுதியில், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்ட மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஆகியோரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் கட்டளைக்கிணங்க, இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், கைப்பற்றப்பட்ட இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை, ‘இரண்டு முக்கியஸ்தர்களும்’ பயன்படுத்தினார்களா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என, சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, சிறைச்சாலை வைத்தியசாலையில் சிறைக் கைதி ஒருவர் அனுமதிக்கப்படுவதாயின் மூன்று வைத்தியர்களின் ஒப்புதல் வேண்டும் என்கிற நிபந்தனையினை அமைச்சர் சுவாமிநாதன் கட்டாயமாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கடந்த வாரம் சிறைத்தண்டனை விடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்தே, சிறைச்சாலை வைத்தியசாலையில் சிறைக் கைதி ஒருவர் அனுமதிக்கப்படுவது தொடர்பில், மேற்படி கட்டுப்பாடுகளை அமைச்சர் விதித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்