மூன்று மாகாண வைத்தியசாலைகளுக்கு பெருமளவு நிதி; அமைச்சர் றிசாட்டின் கோரிக்கைக்கு ராஜித இணக்கம்

🕔 June 29, 2017

 

டக்கு, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள  பிரதான  வைத்தியசாலைகளின் குறைபாடுகளையும், ஆளணித் தேவைகளையும் நிவர்த்தி செய்து தருவதாக சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த வாக்குறுதியினை வழங்கினார்.

மேலும், மருத்துவத் துறையில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடன்  நடவடிக்கை  எடுக்குமாறும்  சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற மேற்படி உயர்மட்ட கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான நவவி, அப்துல்லா மஹ்றூப், தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும் லக்சல நிறுவனத்தின் தலைவருமான எஸ்.எம்.எம். இஸ்மாயில், புத்தளம் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலிசப்றி, கற்பிட்டி பிரதேச அமைப்பாளர் முஸம்மில்,  கிரபைட் நிறுவன பணிப்பாளர் அலிகான் சரீப் ஆகியோருடன் வடமேல் மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர். ஏன்.எம். பரீட், டொக்டர் நகுலநாதன், உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

புத்தளம், சம்மாந்துறை, குருணாகல், மன்னார், சிலாவத்துறை, கிண்ணியா மற்றும் தோப்பூர் வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் சுகாதாரச் சீர்கேடுகள் குறித்தும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த உயர்மட்ட கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.

யுத்தம், சுனாமி மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய அனர்த்தங்களின் பின்னர், இந்தப் பிரதேசங்களில் நோயாளர்கள் படுகின்ற அவஸ்தைகளை அமைச்சர் ரிஷாட் விபரித்ததுடன், ஒழுங்கான வைத்திய வசதிகள் கிடைக்காமல் இந்த பிரதேசங்களில் அடிக்கடி நிகழும் இறப்புக்கள் தொடர்பிலும் அமைச்சர் ராஜிதவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்த சந்திப்பில் வைத்தியசாலைகளின் குறைபாடுகளை தீர்ப்பது குறித்த முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உரிய அதிகாரிகளிடம் அவை உடன் சமர்ப்பிக்கப்பட்டது. நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ராஜித அதிகாரிகளுக்கு கூட்டத்தின் போதே பணிப்புரை விடுத்திருந்தார்.

புத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படாது இடைநிறுத்தப்பட்டுள்ள இரண்டு மாடி – தாதியர் தங்கும் கட்டிடப்பணிகளுக்கென 30 மில்லின் ரூபாவும், 101 மில்லியன் ரூபா பெறுமதியான 36அறைகளைக் கொண்ட வைத்தியர்களுக்கான தங்குமிட புதிய கட்டிடத்துக்காக 40மில்லியன் ரூபாவும், மருத்துவ உபகரணங்களுக்காக 50 மில்லின் ரூபாவும் ஒதுக்கப்பட்டது. இதேவேளை, சி.ரி. ஸ்கேன்மற்றும் டயலசிஸ் யுனிட் உள்ளடங்கலாக 50 மில்லியன் பெறுமதியான வைத்திய உபகரணங்கள், 500 கேவி மின் உற்பத்தியாக்கி உபகரணம் ஆகியவற்றையும் புத்தளம் வைத்தியசாலைக்கு உடன் வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளைப் பணித்தார்.

புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் 80 தாதியர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக அங்கு சுட்டிக்காட்டப்பட்ட போது, குருணாகலில் மேலதிகமாக இருக்கும் 50 பேரை உடன் புத்தள வைத்தியசாலைகளில் பணிக்கமர்த்துவது எனவும், மேலும் தேவையான  தாதிகளை  வேறு  வழிகளில்  பூர்த்தி  செய்வது  எனவும் முடிவு செய்யப்பட்டதுஅத்துடன் புத்தளம்  மாவட்டத்தில்  நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக, பயிற்சியில் இருந்து வெளியேறும் வைத்தியர்களை சேவைக்கு அமர்த்துவது தொடர்பிலும் அங்கு கவனம் செலுத்தப்பட்டது.

கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கென 150 மில்லியன் பெறுமதியான மூன்றுமாடி கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணியை, பிராந்திய பணிப்பாளர் பரீட்டிடம் அமைச்சர் ராஜித ஒப்படைத்தார்.

புத்தளம் வைத்தியசலையிலிருந்து வாரம் ஒரு முறை கற்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்று நிபுணர், மகப்பேற்று நிபுணர் ஆகியோரை அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்மாந்துறை வைத்தியசாலையை, வெளிநாட்டு உதவியுடன் தரமுயர்த்துவதற்கும், மததிய அரசில் அந்த வைத்தியசாலையை உள்வாங்குவதற்கும், அமைச்சர் ராஜிதவிடம் கையளிக்கப்பட்ட முன்மொழிவுகளை, அவர் ஏற்றுக் கொண்டார். மேலும், ஜப்பானிய நிதி உதவியில், அதனை உள்ளீர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுத்தார்.

இறக்காமம், அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை, அமைச்சர் ரிஷாட் விளக்கியதுடன், உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ராஜிதவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

சுனாமிக்குப் பின்னர் தற்காலிக கட்டிடத்தில் இயங்கிவரும் கிண்ணியா வைத்தியசாலையை, ஆறுமாடிக் கட்டிடத்தில் நிரந்தரமாக அதே இடத்தில் அமைப்பதற்கான 2200 மில்லியன் ரூபா செலவிலான முன்மொழிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்றூப் அமைச்சரிடம் கையளித்தார். அதனை அங்கீகரித்த அமைச்சர், ஜப்பானிய நிதி உதவியின் கீழ் இதனை உள்வாங்குமாறு தனது அமைச்சின் மேலதிக செயலாளர் சந்திரகுப்தாவிடம் பணிப்புரைவிடுத்தார். அத்துடன் கிண்ணியா வைத்தியசாலைக்கு புதிய எக்ஸ்ட்ரே இயந்திரம் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கென இயந்திர உபகரணங்கள், புதிய தொலைப்பரிவர்த்தனை கருவிகள், மூதூர் வைத்தியசாலைக்கு பல் சம்பந்தமான வைத்தியத் தொகுதி, பதவிசிரிபுர வைத்தியசாலைக்கு மருத்துவ அதிகாரிகள் தங்குமிட வசதி, மற்றும் ஜெனரேட்டர் ஆகியவை தொடர்பான கோரிக்கைகளையும் அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.  

அண்மையில் கிண்ணியா மூதூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்ட டெங்கு நோயினால் ஏற்பட்ட பாதிப்புகளின் பின்னர், அந்த பிரதேசத்திற்கு பல முறை விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களையும், உதவிகளையும் வழங்கிய அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிகளை அமைச்சர் ராஜித மெச்சினார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்