நாமலின் மான நஷ்ட வழக்கை விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி
நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இருவருக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.
குறித்த வழக்கில் 200 மில்லியன் ரூபாவினை, மான நஷ்ட ஈடாக நாமல் கோரியுள்ளார்.
இந்த வழக்கிற்கு எதிராக, சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த அடிப்படை எதிர்ப்பினை நிராகரித்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சமத் மதநாயக்க, குறித்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு உத்தரவிட்டார்.
ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க செய்திருந்த அடிப்படையற்ற முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு, தன்னை கைது செய்ததாக நாமல் ராஜபக்ஷ தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்னை கைது செய்து தடுத்து வைத்ததன் மூலம், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளததாகவும், இதற்கு இழப்பீடாக 200 மில்லியன் ரூபா வழங்க வேண்டும் எனவும் மேற்படி வழக்கில் நாமல் கோரியுள்ளார்.