அல்லாஹ்வைக் கேவலமாகப் பேசியவனுக்கு, நீதியமைச்சரின் பாதுகாப்பு; நல்லா நடக்கிறது நல்லாட்சி
– அ. அஹமட் –
ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இவ்வரசானது இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் இருக்கிறதென கதைகள் எழுந்தாலும், ஒரு மத குரு கைது செய்யப்படும் போது பெரும்பான்மை மக்களால் எழத்தக்க அழுத்தத்தையே, மக்கள் பார்வைக்கு வெளி காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
நேற்று மாலை ஏழு நாடுகளின் தூதுவர்களும் ராஜதந்திரிகளும் தெவட்டகஹ பள்ளிவாயலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அசாத் சாலி, ஞானசார தேரரை கைது செய்யாமல் தடுக்கும் பிரபலம் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸதான் என கூறியுள்ளார்.
இதன் மூலம் ஞானசார தேரரை கைது செய்ய முடியாமல் இருப்பதன் பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளதை ஏற்றுக்கொள்கிறார். இப்படியான அரசின் முக்கியஸ்தர்கள் அசாத் சாலியுடன் மிக நெருங்கிய தொடர்பை பேணி வருகிறார்கள் என்பதே உண்மையாகும். இதுவே அவரது சமூகப் பற்றின் உண்மை வடிவமாகும்.
நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, ஐ.தே.கவின் முக்கியமான அமைச்சர் என்பதால் இத்தனை நாளும் ஞானசார தேரரின் பின்னால் மஹிந்ததான் உள்ளார் என கூறி வந்த அசாத்சாலி, தனது கருத்திலிருந்து திடீரென பெல்டி அடித்துள்ளார். இதன் மூலம் அன்றும் இனவாதத்தை ஆட்டுவித்த சக்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவல்ல என்பதை அசாத் சாலி மக்கள் முன்றலில் தெளிவுபடுத்துகிறார். இவர்கள் அன்று எதுக்கெடுத்தாலும் முன்னாள் ஜனாதிபதியை குற்றம் சுமத்தியவர்கள் என்பதால் இவர்களின் இவ்வாறான சான்றுதல் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும்.
ஞானசார தேரரை கைது செய்யாமையின் பின்னால் தற்போதும் முன்னாள் ஜானதிபதியே உள்ளார் என்பதை இலங்கை முஸ்லிம்கள் ஏற்கும் மனோ நிலையில் இல்லை. இதனை உணர்ந்த அசாத்சாலி தனது பாதையை இன்னுமோர் திசை நோக்கி திருப்புகிறார். உண்மை எப்போதாவது ஒரு நாள் வெளிப்பாட்டேயாகும்.
நீதி அமைச்சர் விஜயதாஸ தடுக்கின்றார் என்றால், அவர் இவ்வாட்சியில் தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தடுக்கின்றார் என்பதே பொருளாகும். அண்மையில் ஞானசார தேரரை குருநாகலில் வைத்து கைது செய்யும் முயற்சிகள் இடம்பெற்றன. அந்த முயற்சிகளானது மக்களால் தடுக்கப்பட்டது போன்றே வெளியில் காட்டப்பட்டிருந்தது. அசாத் சாலி கூறுவதை வைத்து நோக்கும் போது, அண்மையில் அவரை குருநாகலில் வைத்து கைது செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் என்பது முஸ்லிம்களை ஏமாற்ற மேற்கொள்ளப்பட்ட நாடகமாகும் என்பது தெளிவாகிறது. இது தொடர்பில் அசாத் சாலி மௌனம் பேணுவதேன்?
இப்படி இனவாதிகளுக்கு ஆதரவானவருக்கு நீதியமைச்சு ஒரு போதும் பொருத்தமானதல்ல. இவ்வாட்சியானது அசாத் சாலி குற்றம் சாட்டும் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு நீதி அமைச்சை கொடுத்து அழகு பார்க்கின்றது. இவ்விடயமானது இவ்வரசும் இனவாத சக்திகளுக்கு பலம் வழங்கி, துணை போவதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இந்த விடயத்தில் நீதியை நிலை நாட்ட முடியாமல் இருப்பதற்கு, இவர் ஒரு காரணமாக அமையலாம்.
அளுத்கம கலவரம் இடம்பெற்ற போது, நீதி அமைச்சராக முஸ்லிம் ஒருவரே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றினை வைத்து சிந்தித்தாலும் யாருடைய ஆட்சி முஸ்லிம்களுக்கு சாதகமானது என்பதை மிக இலகுவாக ஒப்பிட்டுக் கொள்ளலாம்.
(ஒன்றிணைந்த எதிரணியின் தமிழ் ஊடகப் பிரிவு)