முஸ்லிம்களுக்கு மூத்திரம் வரவில்லை என்றாலும், ஆட்சியாளர்கள் கவலைப்படுகிறார்கள்: ஞானசார தேரர் விசனம்

🕔 May 19, 2017
– எஸ். ஹமீத் –

“சிங்களவர்களுக்குப் பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை; ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்” என்று, பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

ஞானசார தேரரின் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை, அமைச்சர்களான றிசாட் பதியுதீன், பைசர் முஸ்தபா, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் ஆசாத்சாலி ஆகியோர் இணைந்து, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ஞானசார தேரர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்திருந்தார்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கெதிராக, இந்த முறைப்பாட்டினை ஞானசார மேற்கொண்டார்.

இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, ஞானசார தேரர் மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

”இது அரபு நாடு இல்லையென்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இந்த நாட்டில் எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சியின் தயவைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

வில்பத்தில் காணி அபகரிப்பாளர்களையும், போதைப் பொருள் விற்பனையாளர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

அரபு நாடுகளிடம் பணத்தைப் பெற்றுத் தனியான ஆட்சி நடத்துகிறார்கள். சதொச நிறுவனங்களை அதிகமாக முஸ்லிம்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். மன்னார் வில்பத்துவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மறைத்து வைத்து இந்தியாவைத் தாக்கும் சூழ்நிலைகளை உருவாக்கி வருகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
இவ்வாறு நீண்ட குற்றச்சாட்டுக்களை சுமத்திய ஞானசார தேரர்; ”சிங்களவர்களுக்குப் பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை; ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்” எனவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்