மியன்மார் அகதிகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு

🕔 May 2, 2017
– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் காங்கேசந்துறை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறு    மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கேசன்துறை  கடற்பகுதியில் வைத்து  கடந்த ஏப்ரல் மாதம்  30 ஆம் திகதி காலை இரு இந்தியர்கள்  உட்பட 30 மியன்மார் அகதிகள்  கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்து இவர்களை, யாழ் பிரதான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை குறித்த  அகதிகள் தொடர்பான வழக்கு   யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, 30 மியன்மார் அகதிகளையும்   மிரிஹான தடுப்பு முகாமில்  தங்க வைக்குமாறும், ஏனைய இரு இந்திய மீனவர்களான படகோட்டிகளை சட்டமா அதிபரின் அனுமதிபெறும் வரை தடுத்துவைக்குமாறும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மியன்மார் அகதிகள் சார்பாக சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்    நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

வழக்கு நடைபெற்று முடிந்ததன் பின்னர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“அகதி அந்தஸ்து கோரி குறித்த மியன்மார் நாட்டு மக்கள் வந்தமையினால், அவர்களை ஏதாவது அகதி அந்தஸ்து வழங்கும் நாட்டுக்கு அனுப்பும் வரைக்கும், இலங்கையில் தஞ்சமளிக்குமாறு   நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தோம். இதனடிப்படையில்  மல்லாகம் நீதிவான்  நீதிமன்றம் 30 மியன்மார் நாட்டவர்களையும் உடனடியாக மிரிஹானயிலுள்ள தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்தது” என்றார்.

இந்த  மியன்மார் அகதிகளில்    16 சிறுவர்கள் உட்பட 07 பெண்கள் மற்றும் 07 ஆண்கள் உள்ளடங்குகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்