மூன்று குண்டுகள்தான், உலகம் அழிந்து விடும்: வடகொரியாவை சீண்டாதீர்கள்

🕔 April 26, 2017
– எஸ். ஹமீத் –

”வடகொரியாவிடம் தெர்மோநியூக்ளியர் குண்டுகள் இருக்கின்றன, அவற்றில் மூன்று குண்டுகள் போட்டால் முழு உலகமும்  அழிந்து சாம்பலாகிவிடும்” என்கிற அதிர்ச்சிக் ‘குண்டைத்’ தூக்கிப் போட்டிருக்கிறார் வடகொரியாவின் கௌரவ குடிமகனான அலிஜாண்ட்ரோ கவோ டி பெனோஸ் (Alejandro Cao de Benós)  என்பவர்.

ஸ்பெயின் நாட்டின் பிரபலமான  செய்தி நிறுவனமொன்றுக்கான விஷேட  பேட்டியொன்றின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்; ”யாரும் வட கொரியாவைச் சீண்டாதீர்கள். அவர்களை யாராவது  சீண்டினால்  அவர்கள் தங்களிடமிருக்கும்  துப்பாக்கி மற்றும் ஏவுகணைகள் கொண்டு  தங்களைப் பாதுகாத்து கொள்வார்கள்.

தற்போது வடகொரியாவில் கிம் ஜோங் உன்னின் ஆட்சியில் வட கொரிய மக்கள் மிக்க  நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கட்டுப்பாட்டோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே வன்முறைகள் மற்றும்  குற்றங்கள் எவையும் இல்லை. எனவே, வடகொரியாவை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள். மீறித் தொந்தரவு செய்வீர்களானால் அது உங்களுக்குத்தான் நஷ்டம்.

மேலும் வடகொரியாவிடம் தெர்மோ நியூக்ளியர் குண்டுகள் இருக்கின்றன, அவற்றில் மூன்று குண்டுகள் போட்டால் முழு உலகமும்  அழிந்து சாம்பலாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பிரபலமான அரசியற் செயற்பாட்டாளரான அலிஜாண்ட்ரோ கவோ டி பெனோஸ் என்பவர், வட கொரியாவோடு மிக நெருங்கிய  உறவினைக் கொண்டவராவார். அத்தோடு வெளிநாடுகளுக்கான வட கொரியாவின் கலாசார உறவுகளுக்குரிய விஷேட பிரதிநிதியும்,  வட கொரியாவின் கௌரவப் பிரஜையுமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments