ஒலுவிலில் காணிகளை அபகரித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென தீர்மானம்

🕔 April 23, 2017
– எம்.ஜே.எம். சஜீத் –

லுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்ட அரச அதிகாரிகள், ஒரு மாத காலத்திற்குள் குறித்த காணிகளை, ஒலுவில் வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கு வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, ஒலுவில் பிரதேசத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்து கொண்டவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டுமென, ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை அரச அதிகாரிகள் சிலர் முறையற்ற வகையில் பொய்யான தகவல்களை வழங்கி தங்களின் குழும்பத்தினரின் பெயர்களில் இக்காணிகளைப் பெற்றுள்ளனர்.

ஒலுவில் பிரதேச மக்கள் துறைமுகம், மீன்பிடித் துறைமுகம், மகாபொல பயிற்சி நிலையம், பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுலாவிடுதி போன்றவற்றுக்கு தங்களின் காணிகளை வழங்கிய நிலையில் கடலரிப்பினால் ஒலுவில் பிரதேச காணிகள் தினமும் இழக்கப்டும் நிலை உருவாகியுள்ளது. இதனால், இப்பிரதேச மக்கள் மிகவும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் ஒலுவில் மக்களின் பொதுத் தேவைக்காகவும் குறிப்பாக வைத்தியசாலை, பொது விளையாட்டு மைதானம் மற்றும் வீடமைப்பு கிராமங்கள் அமைப்பதற்காக காணிகள் இல்லாமல் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், முறையற்ற வகையில் காணிகளைப் பெற்ற 23 நபர்களிடம் ஒரு காணித்துண்டுக்கு  02 லட்சம் ரூபா பணம் வழங்கி, இக்காணிகளை ஒலுவில் பிரதேசத்தில் வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடமைப்பு திட்டம் ஒன்றினை உருவாக்குவதற்காக  வழங்குமாறு ஒலுவில் ஜூம்ஆ பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்தது. இதனையடுத்து 12 பேர் மாத்திரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு காணிகளை கையளித்துள்ளனர்.

மீதி 11 பேர் காணிகளை கையளிப்பதாக இணக்கம் தெரிவித்துவிட்டு இதுவரையும் அதனை வழங்கவில்லை. எனவே இவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கு இப்பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொண்டு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவரினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு மாத காலத்திற்குள் இக் காணிகளை சம்பந்தப்பட்டவர்கள் ஒலுவில் வீடமைப்பு திட்டம் அமைப்பதற்கு வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பதாகவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது.

ஒலுவில் பிரதேச மக்கள் நீண்ட காலமாக இக்காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருவதுடன், மக்கள் பேரணிகளையும் நடத்தி பல ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments