‘சிலுக்கு’ அரசியல்

🕔 January 11, 2017

article-mtm-297– முகம்மது தம்பி மரைக்கார் –

வியாபாரத்துக்கு விளம்பரம் அழகு என்பார்கள். இப்போது அரசியலுக்கும் அது தேவையாகி விட்டது. அரசியல் – வியாபாரமாகி விட்டதால் வந்த வினை இதுவாகும். விளம்பரத்தை நம்பி தரமற்ற பொருட்களை வாங்கி மக்கள் ஏமாறும் ஆபத்து, அரசியல் விளம்பரத்திலும் எக்கச்சக்கமாய் உள்ளது. உளியை வைத்துக் கொண்டிருப்போர், தமது கையில் உருட்டுக் கட்டை இருப்பதாக அரசியல் விளம்பரம் செய்கிறார்கள். அது கூடப்பரவாயில்லைளூ ஊசி கூட கையில் இல்லாதவர்களும், தாங்கள் உலக்கைகளைச் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் அபத்தங்களும் அரசியல் விளம்பரங்களில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அம்பாறை மாவட்டமும், முஸ்லிம்களும்

இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்றார்கள். அதனாலேயே, அங்குள்ள முஸ்லிம்கள் ஏராளமான பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். முஸ்லிம்களின் பெரும்பான்மையை அம்பாறை மாவட்டத்தில் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில், பௌத்த பேரினவாதம் கச்சை கட்டிக் கொண்டு களத்தில் நின்று காரியங்களை ஆற்றிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழர்களின் நிலங்களை கைப்பற்றுவது, அவற்றில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது என்று, பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் ‘படு ஜோராக’ நடந்து வருகின்றது. இன்னொருபுறம் முஸ்லிம்களின் ஆளுகைக்குள் இருக்கும் விடயங்களை ‘கழற்றி’ எடுக்கும் வேலைகளும் இடம்பெறுகின்றன. இவைபோக, இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஆறாத புண்ணாக ஏராளமான பிரச்சினைகள் நெடுங்காலமாய் தீர்க்கப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலும் கிடக்கின்றன. ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதாகவே வெளியில் விளம்பரம் செய்யப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பட்டிலிடுவதற்கே, இந்தப் பக்கம் போதாது. இரண்டு, மூன்று பொதுத் தேர்தல்களுக்கு முன்னர் காணப்பட்ட பிரச்சினைகள்கூட, அப்படியே இன்னும் இருக்கின்றன. ஆனாலும், அவை தொடர்பில் அக்கறையற்றிருந்த அரசியல்வாதிகளில் அதிகமானோரைத்தான், மக்களும் திரும்பத் திரும்பத் தேர்வு செய்திருக்கிறார்கள். அரசியல் விளம்பரம் அப்படி வேலை செய்கிறது.

ஆலிம்சேனையின் அவலம்

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலிம்சேனையில் இருந்த மக்களில் சிலரை, அவர்களின் காணிகளிலிருந்து துரத்தியடித்து விட்டு, அங்கு படை முகாமொன்று அமைக்கப்பட்டது. இதனால், பலர் தமது வாழ்விடம் மற்றும் விவசாயக் காணிகளை இழக்க நேரிட்டது. 2011ஆம் ஆண்டு இந்த அவலம் நடந்தது. ஆனால், அங்கிருந்த படையினரில் மிக அதிகமானோர் இப்போது வெளியேறி விட்டனர். 10க்கு உட்பட்ட படையினர்தான் அங்கு இருக்கின்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். இருந்தபோதும், மக்களின் கைப்பற்றப்பட்ட காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இவ்விவகாரம் தொடர்பில், இங்கு அரசியல் செய்கின்றவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் சென்று பேசி, அலைந்து அலுத்துப் போய் விட்டனர். ஆனாலும், தீர்வுகள் எவையும் கிட்டவில்லை. எனவே, தமது காணிகள் படையினரால் அபகரிக்கப்பட்டமைக்கு எதிராக, பாதிக்கப்பட்டவர்களில் இருவர் – சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்குக் கூட, இங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் உதவ முன்வரவில்லை. அரச சார்பற்ற நிறுவனமொன்றுதான், இவர்களுக்கான சட்ட உதவியினை வழங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட, இந்தப் பிரச்சினையை அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மறந்தே விட்டனர்.

கழற்றியெடுக்கப்பட்ட கல்முனை காரியாலயம்

கல்முனை பிரதேசத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்தியக் காரியாலயம் பல வருடங்களாகச் செயற்பட்டு வந்தது. இந்த நிலையில், குறித்த காரியாலயத்தினை நூறு வீதம் சிங்களவர்கள் வாழுகின்ற அம்பாறை நகருக்கு மாற்றி விட்டார்கள். இந்தக் காரியாலயத்தினை அம்பாறைக்குக் கொண்டு செல்வதில், அந்த மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை அமைச்சரொருவர் முன்னின்று செயற்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளால் அதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இத்தனைக்கும் கல்முனை – பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் சொந்த ஊராகும். அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்கள். மு.காங்கிரஸ் ஆளுந்தரப்பில் இருக்கிறது.

மு.கா. தலைவரின் நியாயம்

இந்த விவகாரம் தொடர்பிலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மந்தமான அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் அண்மையில் கேள்வியொன்று முன்வைக்கப்பட்டது. தொலைக்காட்சி நேரடி நிகழ்வொன்றில் மு.கா. தலைவர் கலந்து கொண்டபோது, குறித்த கேள்வியினை – நிகழ்ச்சி நடத்துநர் முன்வைத்தார். அதற்கு ஹக்கீம் வழங்கிய விடையில் நிறையவே நியாயங்கள் இருந்தன.

‘அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில், இருவர் பிரதியமைச்சர்கள். இவர்கள் தமது ஊருக்கு அருகிலுள்ள பிரதேசங்களையும் தாராளமாகக் கவனிக்க வேண்டும். ஆனாலும், இந்த மூவரையும் பல தடவை – நான் கடிந்து கொண்டுள்ளேன். எல்லாப் பிரச்சினைகளையும், கட்சித் தலைவர்தான் தாங்க வேண்டுமென்றில்லை. என்னை விடவும் அவர்கள்தான், தங்கள் பிரதேசங்களிலுள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று மு.கா. தலைவர், அந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். அந்தப் பதில் நியாயமானது என்று பலரும் அபிப்பிராயப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதற்காக மு.கா. தலைவர் ஹக்கீம் மிகவும் சிரத்தையுடன் களத்தில் இறங்கிச் செயற்பட்டிருந்தார். அப்படி வெற்றி பெறச் செய்த மூவரில், ஹரீஸ் மற்றும் பைசால் காசிம் ஆகியோருக்கு பிரதியமைச்சர் பதவிகளையும், மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூருக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவியினையும் ஹக்கீம் பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்குப் பிறகும், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் அபிவிருத்தி தொடர்பிலும், அங்குள்ள பிரச்சினைகள் குறித்தும், அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர் ஹக்கீம்தான் தலையிட்டு முழுமையாகச் செயற்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகாது.

மேலே நாம் சுட்டிக்காட்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இன்னுமொரு விடயத்தினையும் கூறினார். அதாவது, ‘சுறுசுறுப்பாக இயங்குகின்ற மக்கள் பிரதிநிதிகள், என்னுடைய அமைச்சினூடாக ஏராளமான நிதிகளைப் பெற்றெடுத்துக் கொண்டு, அவர்களின் பிரதேச அபிவிருத்திகளுக்காகச் செலவு செய்கின்றனர்’ என்றார். திருகோணமலை மாவட்ட மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் வடமேல் மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா ஆகியோர், இந்த விடயத்தில் சுறுசுறுப்பாக செயற்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, தன்னுடைய அமைச்சின் நிதியிலிருந்து மேற்படி இருவரும் தலா 300 மில்லியன் ரூபாவினைப் பெற்றெடுத்து, அதனை தத்தமது பிரதேச அபிவிருத்திக்கு பயன்படுத்தியதாகவும் மு.கா. தலைவர் ஹக்கீம் சுட்டிக்காட்டியதோடு, ‘அவர்கள் இருவரையும் பாராட்டுகிறேன்’ என்றும் அந்த தொலைக்காட்சி நிகழ்வில் வைத்துத் தெரிவித்தார்.

அப்படியென்றால், அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுறுசுறுப்பாகச் செயற்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அதனால்தான், ‘அவர்களை பல தடவை நான் கடிந்துள்ளேன்’ என்று ஹக்கீம் கூறுகின்றார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய காரியாலயத்தை கல்முனையிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்வதற்கு கூறப்பட்ட காரணம்ளூ கல்முனையிலுள்ள அலுவலகம் இடப் பற்றாக் குறையானது என்பதாகும். அத்தோடு, பிரதான வீதியை ஒட்டியதாகவும், குறித்த அலுவலகம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ‘எனவே, தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் கல்முனை கரையோரப் பகுதியில், பொருத்தமான ஓர் இடத்தினை தேடிப் பெறுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீசிடம் நான் கூறியிருந்தேன். ஆனால், இதுவரை அது நடைபெறவில்லை’ என்றும், ஹக்கீம் அந்த நிகழ்வில் வைத்துக் கூறியிருந்தார்.

மு.கா. தலைவர் கூறுகின்ற இந்த விடயம் உண்மையானது என்றால், கல்முனையிலிருந்து அம்பாறைக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகக் காரியாலயம் கொண்டு செல்லப்பட்டமைக்கான முழுப் பொறுப்பினையும், பிரதியமைச்சர் ஹரீஸ்தான் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் ஹரீஸ் மீது மு.கா. தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டினை, இதுவரை ஹரீஸ் உத்தியோகபூர்வமாக மறுக்கவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பொறுப்பற்ற செயற்பாடுகள்

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற ஒவ்வொரு பிரச்சினையிலும், இங்குள்ள முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். அண்மையில், இறக்காமத்திலுள்ள மாயக்கல்லி மலையில், அடாத்தாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமை தொடர்பில், இதுவரை நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. பௌத்தர்கள் எவருமில்லாத பகுதியொன்றில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டமைக்கு எதிராக, அங்குள்ள முஸ்லிம்களும், தமிழர்களும் தமது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்திருந்ததோடு, அந்த சிலையினை தமது பகுதியிலிருந்து அகற்றுவதற்குத் தேவையான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்குமாறும் தமது மக்கள் பிரதிநிதிகளிடம் கூறியிருந்தனர். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும் சிலை வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டிருந்தார். மு.கா. தலைவர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்த செய்தி, ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நியாயங்களும் கிடைக்கவில்லை.

பொத்தானை விவகாரம்

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்தானை எனும் இடத்திலுள்ள, முஸ்லிம் பெரியார் ஒருவர் அடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இடத்தினையும், அங்குள்ள சிறிய பள்ளிவாசல் ஒன்றினையும் உள்ளடக்கிய பகுதியொன்றினை, கடந்த 07ஆம் திகதியன்று தொல்லியல் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளனர். (முழுமையான தகவலுக்கு 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை ‘தமிர் மிரர்’ பத்திரிகையில் வெளியான, ‘பொத்தானை: களவு போகும் நிலம்’ என்கிற கட்டுரையினை வாசிக்கவும்) இந்த நடவடிக்கை காரணமாக, அங்குள்ள முஸ்லிம் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். ஆனாலும், எமது கட்டுரை வெளியாகும் வரை, அங்கு எந்தவொரு முஸ்லிம் அரசியல் பிரதிநிதியும் சென்று நிலைமைகளைப் பார்வையிடவில்லை. கடந்த 02ஆம் திகதி தகவல் சேகரிப்பதற்காக அந்த இடத்துக்கு நாம் சென்றிருந்தோம். அப்போது, அந்த இடத்திலுள்ள இஸ்லாமியப் பெரியாரின் அடக்கஸ்தலத்தினை பராமரிக்கும் குழுவினருடன் நாம் சந்தித்துப் பேசினோம். அவர்கள் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை, எந்தவொரு அரசியல் பிரதிநிதியும் அங்கு வரவில்லை என்று, அவர்கள் விசனம் தெரிவித்தனர். மு.காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனிதான் – அந்தப் பராமரிப்புக் குழுவினரை நம்முடன் தொடர்புபடுத்தி, அந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார்.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எவரும் தமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாமையினால், குறித்த பராமரிப்புக் குழுவினர், கடந்த 05ஆம் திகதியன்று ஒரு வாகனத்தை எடுத்துக் கொண்டு கொழும்பு சென்று, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்கும் ஹனீபா மதனிதான் ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்று, பராமரிப்புக் குழுவினர் கூறுகின்றனர். ஹக்கீமைச் சந்தித்த மேற்படி குழுவினர், தமது சமயத்தலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினைக் கூறியதோடு, அந்த இடத்தினை விடுவித்துத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 07ஆம் திகதி சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு – தான் வருகை தரவுள்ளதாகவும், இதன்போது பொத்தானைப் பிரதேசத்துக்கு வந்து – குறித்த இடத்தைப் பார்வையிடுவேன் எனவும், அமைச்சர் ஹக்கீம் உறுதியளித்திருந்தார்.

இதற்கிணங்க, மு.கா. தலைவர் ஹக்கீம் கடந்த சனிக்கிழமை பொத்தானைப் பகுதிக்குச் சென்று, தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள இடத்தினைப் பார்வையிட்டார். அதுவரை, அந்த இடத்துக்குச் சென்று என்னதான் நடந்திருக்கிறது என்றுகூடப் பார்க்காத, மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், அன்றைய தினம் ஹக்கீமுடன் தொற்றிக் கொண்டு பொத்தானைக்கு வந்திருந்தார்கள். அது – தலைவருக்குத் தலையைக் காட்டும் அரசியலாகும். கையகப்படுத்தப்பட்ட இடத்தினைப் பராமரிக்கும் குழுவினருக்கு, ஹக்கீமைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்த ஹனீபா மதனியால், ஹக்கீம் வருகை தந்திருந்த தினத்தில் பொத்தானைக்கு வர முடியவில்லை. அவர் கொழும்பில் இருந்ததாகத் தெரியவந்தது.

இந்த நிலையில், அன்றைய தினம் இணையத்தளமொன்றில் ஹக்கீமுடைய அந்தப் பயணம் தொடர்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. கிழக்கு மாகாணசபை உறுப்பினரொருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவருடைய ஏற்பாட்டில், பொத்தானைக்கு ஹக்கீம் விஜயம் செய்தார்’ என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையாகவே, அந்த மாகாணசபை உறுப்பினருக்கும் ஹக்கீமுடைய பொத்தானை வருகைக்கும் இடையில் ஒரு துளியளவும் தொடர்பு கிடையாது என்று, சம்பந்தப்பட்ட பராமரிப்புக் குழுவினர் எரிச்சலுடன் தெரிவித்தார்கள். ‘எங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை, ஒரு தடவையேனும் வந்து பார்க்காத இந்த நபர், எங்கள் பிரச்சினையை வைத்துக் கொண்டு, அரசியல் விளம்பரம் தேட முயற்சிக்கிறார். இது அசிங்கமான செயற்பாடாகும்’ என்று, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தின் பரிபாலனக் குழு உறுப்பினரொருவர் விசனப்பட்டுக் கொண்டார்.

இந்த இடத்தில் குறிப்பிடுவதற்கு ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. தமிழ் சினிமாவில், சில்க் ஸ்மிதா என்று ஒரு நடிகை இருந்தார். பாமர சினிமா ரசிகர்கள் அந்த நடிகையை ‘சிலுக்கு’ என்றுதான் கூறுவார்கள். அவர் ஒரு கவர்ச்சி நடிகை, அதனால், அந்த நடிகை நடிக்கும் படங்களை வெற்றிகரமாக ஒட்டுவதற்கு, சில்க் நடித்த படம் என்று சொல்லித்தான் விளம்பரம் செய்வார்கள். சில படங்களில் அந்த நடிகை, ஒரு பாடல் காட்சிக்கு மட்டும்தான் வந்து நடனமாடி விட்டுச் சென்றாலும், முழுவதுமாக சில்க் நடத்த படம்போலவே, அதனை விளம்பரம் செய்வார்கள்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலும் கிட்டத்தட்ட, சில்க் ஸ்மிதாவை வைத்துச் செய்யப்படும் சினிமா விளம்பரம் போல்தான் இருக்கிறது. அரசியல் அரங்கில் சும்மா ஒரு ‘பாடல் காட்சிக்கு’ வந்து போகின்றவர்களெல்லாம், ‘திரைப்படத்தின்’ கதாநாயகர்கள் தாங்கள்தான் என்று விளம்பரம் செய்கின்றமையானது, சில்க் ஸ்மிதாவின் படுமோசமான கவர்ச்சியை விடவும், கூச்சம் தருகின்ற கேவலமான செயற்பாடாகவே தெரிகிறது.

நன்றி: தமிழ் மிரர் (10 ஜனவரி 2017)

Comments