கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி

🕔 November 5, 2016

Thandayuthapaani - 01– எப்.முபாரக் –

கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயேனும் திரும்ப மாட்டாது என, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 3400 மில்லியன் ரூபாய் திறைசேரிக்கு திரும்பிச் செல்வதாக, மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்திருந்தார்.

இவ்விடயத்தினைத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று சனிக்கிழமை கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

வகைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் செயற்றிட்ட வசதிக்கேற்ப ஆசிரியர் விடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள்,  கனிஷ்ட இடைநிலை ஆய்வுகூடங்கள், விளையாட்டுத்தொகுதி, அழகியற்  தொகுதி,  தொழில்நுட்பக் கட்டடம், ஆரம்பப்பிரிவு கற்றல் வள நிலையங்கள், வகுப்பறைக் கட்டடங்கள்,  அதிபர் விடுதிகள், சிறு திருத்த வேலைகள், பாரிய திருத்த வேலைகள், குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதிகளைச் செய்தல் முதலான பல்வோறு நிர்மாணச் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டன. இவ்வாறு திட்டமிடப்பட்ட 2,314 நிர்மாணச் செயற்பாடுகளுக்காக, கல்வி அமைச்சால் இவ்வருடத்துக்காக 5,458 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தத்திட்டம் மத்திய கல்வி அமைச்சால் உருவாக்கப்பட்ட ஒரு விசேட திட்டமாகும். இந்த திட்டத்துக்கான பல்வேறு கலந்துரையாடல்கள் தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் நடாத்தப்பட்டன.  பின்னர் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றுக்கான அங்கிகாரம் பெறப்பட்டு  இறுதியாக இத்திட்டம் இவ்வருட நடுப்பகுதியின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.

அரை வருடம் கடந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 5,458 மில்லியன் ரூபாய்க்கான கட்டுமானங்களை,  வருட முடிவுக்குள் முழுமையாக பூர்த்தி செய்வதில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் பற்றி கல்வி அமைச்சுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

எனவே, இவ்வருடத்துக்கான ஒதுக்கீடு அடுத்த வருடத்துக்கும் நிர்மாண வேலைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படலாம் என எமக்கு கூறப்பட்டது. ஆகவே, இவ்வருடத்துக்கான ஒதுக்கீட்டில் ஒரு ரூபாயேனும் திரும்ப மாட்டாது என்பதை கிழக்கு கல்விச் சமூகத்துக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திட்டமிடப்பட்ட 2,314 நிர்மாணச் செயற்பாடுகளில் 1,311 செயற்பாடுகள், இவ்வருடத்தின் இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுவதற்கும் அவற்றில் கணிசமான நிர்மானச் செயற்பாடுகளை முடிப்பதற்குமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி 2,025 மில்லியன் ரூபாய்க்கான நிர்மாண வேலைகள் முடிவுறுத்தப்படும். மிகுதி வேலைகள் அடுத்த வருடம் தொடர்ந்து நடைபெறும்.

இந்த திட்டத்துக்கான 5,458 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டை விடவும்,  பாடசாலையின் நிர்மாண வேலைகளுக்காக வழமையாக ஒதுக்கப்பட்டுகின்ற மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை  இவ்வருடம் 1,010 மில்லியன் ரூபாயாகக் கிடைத்துள்ளது.  இது கடந்த வருடங்களை விடவும் அதிகமான தொகையாகும். அத்துடன் உலக வங்கி நிதியுதவியாக பாடசாலை கட்டட நிர்மாணங்களுக்காக இவ்வருடம் 485 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளது.

இந்த நிதிகளுக்கான நிர்மாண வேலைகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே, மாகாணக் கல்வி அமைச்சும் மாகாண கல்வித் திணைக்களமும், பாடசாலைகளின் அபிவிருத்திக்காக கிடைத்துள்ள நிதி ஒதுக்கீடுகளை முழுமையாக பயன்படுத்துவதற்காக, சாத்தியமான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றேன்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்