தென்கிழக்கு பல்கலைக்கழகம்: அரசியல்வாதிகள் கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!

🕔 June 11, 2015

SEUSL - 003– ஆசிரியர் கருத்து –

ரு பஸ் வண்டி-  நீண்ட பயணமொன்றுக்கான ஆயத்தத்துடன் நிற்கிறது. பஸ் நிறைய பயணிகள்; எதிர்பார்ப்புகளுடன் ஏறி அமர்ந்திருக்கிறார்கள்.

வண்டியின் சாரதி இங்கு முக்கியமானவர். பஸ்ஸினுள் அமர்ந்திருக்கும் அத்தனை பயணிகளையும், ஆபத்துகளின்றி உரிய இடத்துக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். அது சாரதியின் கைகளில்தான் உள்ளது.  புத்திசாதுரியம், திறமை மற்றும் அனுபவமுள்ள ஒரு சாரதியினால்தான், பஸ் வண்டியினுள் அமர்ந்திருப்போருக்கு – பாதுகாப்பானதொரு பயணத்தினை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.

இதை விடுத்து, நமக்கு வேண்டிய ஒருவர் – பஸ்ஸின் சாரதியாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார் என்பதற்காக, கண்ணை மூடிக்கொண்டு – அவரிடம் வாகனத்தினை ஒப்படைத்தால்,  பயணிகளின் கதி அவ்வளவுதான். நமக்கு வேண்டிய ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக, பஸ்ஸினுள் அமர்ந்திருக்கும் – பயணிகளின் உயிர்களோடு விளையாட முடியாது.

– 0 –

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது – அந்தப் பிராந்திய மக்களுக்கு கிடைத்துள்ள பெரும் பொக்கிஷமாகும். குறிப்பாக, முஸ்லிம் சமூகம் தலையில் வைத்துக் கொண்டாட வேண்டிய கல்விக் களஞ்சியமாக உள்ளது.

ஆனால், துரதிஷ்டவசமாக – இந்தப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலம் முதல், அரசியலுக்குள்ளும் – அரசியல்வாதிகளின் கரங்களுக்குள்ளும் சிக்கிக் கிடக்கிறது. இதனால், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் – அதன் அடைவு மட்டத்தினை எதிர்பார்த்த வகையில் எட்டவில்லை என்பது – கல்வித்துறைசார்ந்தோரின் கவலையாகும்.

அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் பல்கலைக்கழகத்தின் ‘பெரிய’ இருக்கைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் நபர்கள் – தாம், கல்வித்துறை சார்ந்தவர்கள் என்பதை மறந்து, கொந்தராத்துக்காரர்களைப் போல் செயற்பட்ட கதைகள் ஏராளமுள்ளன.

தமக்கு எது நடந்தாலும், தம்மை பெரிய ‘கதிரை’யில் உட்கார வைப்பதற்கு துணைபுரிந்த அரசியல்வாதிகள் காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கையில் – பல்கலைக்கழகத்தின் சொத்துக்களை, தின்று விழுங்கி ஏப்பமிட்டவர்களின் கதைகள் குறித்தும் நாமறிவோம்.

இவைபோக, அரசியலை வைத்துக்கொண்டு – சில விரிவுரையாளர்கள், உபவேந்தரின் அப்பனுக்கெல்லாம் அப்பன் போல் – பல்கலைக்கழகத்தின் உள்ளும், வெளியிலும் ஆடித் திரிந்த நடனங்கள் குறித்தும் இங்கு நிறையவே எழுத முடியும்.

இவ்வாறானதொரு பின்னணியில், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தற்போதைய உபவேந்தருடைய பதவிக் காலம் நிறைவடைவதால், புதிய உபவேந்தர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கிணங்க, புதிய உபவேந்தர் பதவிக்காக பலர் போட்டியிட்டனர். அவர்களில் மூவர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில்,  தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களின் வாக்களிப்பின்படி, மேற்படி மூவரில் – ஒருவர் 10 புள்ளிகளையும், மற்றொருவர் 09 புள்ளிகளையும், இன்னுமொருவர் 08 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இவர்களில் யார் உபவேந்தர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்பதுதான் இங்கு பெரும் கேள்வியாக உள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பதவிக்கான போட்டியில், இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளவர்கள் அல்லது அவர்களில் சிலர் – அந்தப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, அரசியல்வாதிகளின் ஆதரவினைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியை இங்கு வெட்கத்துடன் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

தேர்தலில் போட்டியிடுகின்ற ஓர் அரசியல்வாதி, தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, வீடு வீடாக வாக்குக் கேட்டு – ஏறி இறங்குவது போல், உபவேந்தர் கதிரைக்குப் போட்டியிடுகின்ற மேற்படி நபர்கள், தமக்கு சிபாரிசு வழங்குமாறு கோரி – அமைசர்களினதும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வாசற்படி மண்ணை எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தம்மிடம் சிபாரிசு கேட்டு வருகின்றார் என்பதற்காக, பொருத்தமற்ற ஒருவருக்கு ஆதரவினை வழங்கி விடக் கூடாது. இன்னும் சொன்னால், இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் யாருக்கும் சிபாரிசு செய்யாமல் ஒதுங்கி நிற்பதுதான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் செய்கின்ற மகத்தான உபகாரமாகும்.

நாட்டில், தற்போது ஒரு நல்லாட்சி நடப்பதாக மக்கள் நம்புகின்றார்கள். தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக யாரை நியமிப்பது என்கிற இறுதி முடிவினை ஜனாதிபதிதான் எடுப்பார். அந்தவகையில், உபவேந்தர் பதவிக்கு பொருத்தமான ஒருவரையே  – ஜனாதிபதி நியமிப்பார் என நம்பலாம். ஆகவே,  அரசியல்வாதிகள் இந்த விவகாரத்தில் சற்று ஒதுங்கி நில்லுங்கள் என்கிற விண்ணப்பத்தினை ‘புதிது’ செய்தித் தளத்தின் ‘ஆசிரியர் கருத்தின்’ ஊடாக, இங்கு முன்வைக்கின்றோம்.

அப்படியில்லாமல், ஆரம்பத்தில் நாம் சொன்ன உதாரணம்போல், அனுபவமும் – ஆற்றலுமுள்ள ஒரு சாரதியை விட்டுவிட்டு, நமக்கு வேண்டிய நபர் என்பதற்காக, ஒருவரை – சாரதி ஆசனத்தில் உட்கார வைப்போமானால், அந்த பஸ்ஸில் பயணம் செய்வோரின் உயிர்களுக்கு நாமே உலை வைத்த குற்றத்துக்கு ஆளாக நேரிடும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்