பலகை வீடுகளில் வாழும், மாளிகாவத்தை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரிக்கை
🕔 June 10, 2015
– அஸ்ரப் ஏ. சமத் –
கொழும்பு மாளிகாவத்தை அப்பில் தோட்டத்தில் பலகை வீடுகளிலும் – அடிப்படை வசதிகளற்ற சிறிய வீடுகளிலும் வாழுகின்ற மக்களுக்கு, அவர்களின் பிரதேசங்களிலேயே தொடர் மாடி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்மென அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள, அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் தலைமையகத்தில் – இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேற்படி ஊடக சந்திப்பில் – முன்னணியின் உப தலைவர் எம். பாருக்,பொருளாளர் சாம் நாவாஸ், முஸ்லீம் லீக் வாலிப முன்னணியின் மாளிகாவத்தைக் கிளைத் தலைவர் எம். இசாக் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தேசிய பிரசார பணிப்பாளர் இர்சாத் ஏ. காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாளிகாவத்தை அப்பில் தோட்ட மக்களின் குடியிருப்பு பிரச்சினைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;
மாளிகாவத்தையிலுள்ள அப்பில் தோட்டத்தில் 1600 குடும்பங்கள் கடந்த 30 வருட காலமாக வசதியற்ற மிகச் சிறிய வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, இக் குடும்பங்களில் மிக அதிகமானோர் – பலகை வீடுகளில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்கின்றனர்.
உலகிலே பாரிய வளர்ச்சிகண்ட நகரமாக கொழும்பு அபிவிருத்தி கண்டுவருகின்ற போதிலும், மாளிகவாத்தையிலும் – ஏனைய பிரதேசங்களிலும் வாழும் மக்கள், பரம்பரை பரம்பரையாக இவ்வாறான வசதியற்ற குடியிருப்புக்களிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சமூகத்தின் குடியிருப்புப் பிரச்சினைக்கு – எந்தவொரு அரசியல்வாதியும் இதுவரை தீர்வுபெற்றுத் கொடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
‘நாங்களாகவே வீடொன்றைக் கட்டிக் கொள்ள வசதியில்லாமல் இருக்கின்றோம். யாராவது உதவ வந்தாலும் – அதில் பாரிய தடைகள் ஏற்படுகின்றன. கொழும்பில் பாரிய அபிவிருத்தி என்ற போர்வையில், எங்களுக்கென்று மலசல கூடத்தைக் கூட நிர்மாணிப்பதென்றாலும், நகர அபிவிருத்தி அதிகாரசபை, கொழும்பு மாநகரசபை ஆகியவற்றில் அனுமதி பெற வேண்டிய நிர்ப்பந்தமுள்ளது. எங்களையும் எங்கள் பரம்பரையினையும் இவ்வாறான உலகத்தில் வாழுவதற்கே நிர்ப்பந்திக்கின்றனர’ எனஅப்பிரதேச குடியிருப்பாளர்கள் கண்கலங்கிக் கூறுகின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுக்கு இங்குள்ள மக்கள் 95 வீதம் வாக்களித்தனர். புதிய பிரதமர், வீடமைப்பு மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டபோதிலும், இப்பிரதேச மக்கள் தமக்கென – நல்லதொரு வீடொன்றில்லாமல் மிகவும் கஸ்டத்தில் வாழ்கின்றனர்.
இதனால் – பாதுபாப்பின்மை, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பாவனை போன்றவற்றினால் – இப்பிரதேசத்தில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
இப்பிரதேசத்தில் வாழும் ஒரு தொகை மக்களுக்கு இங்கேயே தொடர்மாடி வீடுகள் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, எதிர்காலத்திலும் வீடுகளை நிர்மாணித்து இம்மக்களை குடியேற்றுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
25 அடி நீளம் கொண்ட பலகைளினாலான சிறு வீடுகளுக்குள் 03 குடும்பங்கள் வாழ்கின்றன. ஒருகுடும்பம் வீதியில் அல்லது பாதையோரத்தில் இருக்க, இன்னொரு குடும்பம் உள்ளே தூங்குகின்றது. பின்னர் அவர்கள் காலையில் எழுந்து, தொழிலுக்குச் சென்றவுடன் மற்றைய குடும்பத்தவர்கள் வீட்டினுள் தூங்குகின்றனர்.
உரிய வடிகான் வசதியின்றி மழைகாலங்களில் இந்தவீடுகளில் நீர் தேங்கி நிற்பதால், இங்குள்ள பிள்ளைகள் நோயினால் பாதிப்படைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் நாளாந்தம் நடைபெறுகின்றன.
பெண்பிள்ளைகளை பாதுகாப்பது மிகவும் கஸ்டமாக உள்ளது. பாடசாலை சிறுவர்கள் தமது கல்வியை இடைநடுவில் விடுகின்றனர். கடந்த அரசாங்கம் இங்கு வாழ்ந்த 125 குடும்பங்களை பொரளையில் தொடர் மாடி வீடுகளில் குடியமர்த்தினார்கள். மிகுதியான 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தொடர்ந்தும் இங்கு வாழ்ந்து கஸ்டங்களை அனுபவிக்கின்றனர்.
இவர்களுக்கு உரிய தொடர் மாடி வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு, இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வினயமாக கேட்கின்றோம்.
மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நிர்மாணித்த வீடமைப்புத் திட்டத்திற்குப் பிறகு, கடந்த 30 ஆண்டுகளாக, எந்தவொரு அரசாங்கமும் தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தினை மாளிகாவத்தையில் ஏற்படுத்தவில்லை.
இதுவரை இந்த புதிய அரசாங்கமோ, நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோ, இம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நேரடியாக வந்து பார்வையிடவில்லை.
மாளிகாவத்தையில் பிறந்து வளர்ந்த மக்களை மாளிகாவத்தையிலேயே குடியமர்த்த வேண்டும். அவ்வாறில்லாமல், இங்குள்ளவர்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் வேலைத் திட்டம் நடைபெறுமானால், கொழும்பு மத்திய தொகுதியிலுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மை இல்லாமல் போகும் அபாயம் ஏற்படும்.