தலைப்புச் செய்திகள்

பாடசாலை மாணவியை கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு: பொலிஸ் உதவி பரிசோதகருக்கு 50 ஆண்டு கடூழிய சிறை

பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்தி, கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 50 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தண்டனையை அவர் 15 ஆண்டுகளுக்குள் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நான்கு தனித்தனி குற்றச்சாட்டுகள் தொடர்பான தீர்ப்பு இதன்போது வழங்கப்பட்டது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அரச தரப்பு முன்வைத்த நான்கு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சிறைத்தண்டனையுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 50,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் கூடுதலாக ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.