
கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, பிரபல சிம்பாப்வே மத போதகர் யூபர்ட் ஏஞ்சல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை நேற்று (24) செவ்வாய்க்கிழமை ஹராரே நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, இன்று புதன்கிழமை வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட ஏஞ்சல், ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சிம்பாப்வே ஊடக அறிக்கைகளின்படி, 40 வயதுப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மத போதகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் அல்லது சாட்சிகளிடம் தலையிடக்கூடும் என்பதைக் காரணம் காட்டி, அரசு தரப்பு சட்டத்தரணிகள் அவருக்குப் பிணை வழங்குவதை எதிர்த்தனர். இதற்கிடையில், அவரின் சட்டத்தரணிகள், அவரது கைதுக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை எதிர்த்து சவால் விடுத்தனர்.
இன்று புதன்கிழமை (25) அவரது பிணை மனு மீதான தீர்ப்பு வரும் வரை, யூபர்ட் ஏஞ்சலை நீதிமன்றம் விளக்கமறியலில் வைத்துள்ளது.
யூபர்ட் ஏஞ்சல் இதற்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதோடு, ஜெரோம் பெனாண்டோவுடனான தனது தொடர்பு மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஏஞ்சலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.



