தலைப்புச் செய்திகள்

நாடாளுமன்றத்துக்கான உணவு மற்றும் சீருடைச் செலவு 258 மில்லியன் ரூபாயை விடவும் அதிகரிப்பு

நாடாளுமன்றம் 2025-ஆம் ஆண்டில் – உணவு, பானங்கள், குடிநீர் போத்தல் மற்றும் சீருடைகளுக்காக 258.76 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது. இது கடந்த 06 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த வருடாந்த செலவாகும். இதில் உணவு மற்றும் பானங்களுக்கான செலவு மட்டும் 247 மில்லியன் ரூபாயாகும் என்று உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான வருடாந்தி செயல் திறன் அறிக்கையின்படி, உணவு மற்றும் பானங்களை வாங்குவதற்கு 247.05 மில்லியன் ரூபாயும், குடிநீர் போத்தலுக்காக 2.28 மில்லியன் ரூபாயும், சீருடைகளுக்காக 9.43 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 258.76 மில்லியன் ரூபாய் செலவாகியுள்ளது. கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கையின்படி, 2024-ஆம் ஆண்டில் உணவு மற்றும் சீருடைகளுக்காக 238.09 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது. 2025-ஆம் ஆண்டின் இந்தச் செலவுத் தொகை அதைவிட சுமார் 8.7 சதவீதம் அதிகமாகும்.

ஓகஸ்ட் 21 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, எட்டாவது மற்றும் ஒன்பதாவது நாடாளுமன்றங்கள் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கையின்படி, உணவு மற்றும் சீருடைகளுக்கான செலவு 2020-இல் 95.74 மில்லியன் ரூபாயிலிருந்து 2021-இல் 111.86 மில்லியன் ரூபாயாக அதிகரித்தது. பின்னர், 2022-இல் 193.71 மில்லியன் ரூபாயாகவும், 2023-இல் உச்சபட்சமாக 254.61 மில்லியன் ரூபாயாகவும் உயர்ந்தது. அதன் பிறகு, 2024-இல் சற்று குறைந்து 238.09 மில்லியன் ரூபாயாகப் பதிவானது.

அந்த அறிக்கையின்படி, நாடாளுமன்றத்தின் செலவுகள் ‘செலவுத் தலைப்பு எண் 16’-இன் கீழ் மூன்று திட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை – சபாநாயகர் அலுவலகம், நாடாளுமன்றப் பணியாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான திட்டங்களாகும்.

2020 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் உணவு மற்றும் சீருடைகளுக்காகச் செலவிடப்பட்ட மொத்தம் 894.01 மில்லியன் ரூபாயில், 873.70 மில்லியன் ரூபாய் (சுமார் 98 சதவீதம்) நாடாளுமன்றப் பணியாளர்கள் தொடர்பான திட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது. மேலும், சபாநாயகர் அலுவலகத் திட்டத்தின் கீழ் 10.72 மில்லியன் ரூபாயும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான திட்டத்தின் கீழ் 9.59 மில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன. 2023-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் திட்டத்தின் கீழ், இதுபோன்ற செலவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அப்போது ரூ. 3.71 மில்லியன் செலவிடப்பட்டது, அதைத் தொடர்ந்து 2024-ல் ரூ. 5.88 மில்லியன் செலவிடப்பட்டது.

2025-ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்கள், செயல்திறன் அறிக்கையின் கொள்முதல் பிரிவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அப்பிரிவு, அந்த ஆண்டில் வாங்கப்பட்ட பொருட்களின் வரி உட்பட விலையைப் பட்டியலிடுகிறது. கொள்முதல் வழிகாட்டுதல்களுக்கு இணங்க விலைப்புள்ளிகள் கோரப்பட்டதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

2025-ஆம் ஆண்டுக்கான சீருடைக் கொள்முதல்கள், நாடாளுமன்றம் மட்டுமல்லாமல், சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லம், நுவரெலியாவில் உள்ள தளபதியின் இல்லம் (General’s House in Nuwara Eliya) மற்றும் அனுராதபுரத்தில் உள்ள ‘மெத் சேவனா’ நாடாளுமன்ற சுற்று பங்களா ஆகியவற்றையும் உள்ளடக்கியது.