
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் கோட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பெண் பிரதம பரிசோதகர் வருனி போகஹவத்த, பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த இடைநிறுத்த உத்தரவை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் சமிக விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார்.
கார் ஒன்றை வாங்கியதற்கும், அதற்கான குத்தகை (leasing) தவணைகளைச் செலுத்தியதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலம் குறித்து வெளிப்படுத்தத் தவறியமை அல்லது அதனை உறுதிப்படுத்தத் தவறியமை காரணமாக, வருணி போகஹவத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு முன்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அவரிடமிருந்த ‘ஹொண்டா வெசல்’ (Honda Vezel) ரக கார் ஒன்றைக் கைப்பற்றியிருந்தனர்.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்ற 01 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் தொடர்புடையவர் எனக் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே, இந்த வாகனத்திற்கான குத்தகைத் தவணைகளைச் செலுத்தியுள்ளமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த வாகனம் கைப்பற்றப்பட்டது.



