தலைப்புச் செய்திகள்

கிரிஷ் வழக்கில் நாமலுக்குப் பிணை; ஆனாலும் ‘சிறையில்தான்’ இருப்பார்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ (Krrish) பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) பிணை வழங்கி உத்தரவிட்டது.

அதேவேளை, அவர் வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இருப்பினும், அவர் மீது தொடரப்பட்டுள்ள வேறு சில சட்ட நடவடிக்கைகளில் இன்னும் பிணை கிடைக்கப்பெறாததால், நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலிலேயே இருப்பார்.

‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அது குறித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு மீதான தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியது.

கொழும்பு கோட்டையில் உள்ள ‘ட்ரான்ஸ்வொர்க்ஸ் ஸ்கொயர்’ (Transworks Square) பகுதியில் அமைந்திருந்த நிலத்தை, பன்முக மேம்பாட்டுத் திட்டத்திற்காக ‘கிரிஷ்’ நிறுவனத்திற்கு மாற்றியமைத்தபோது, ​​100 மில்லியன் ரூபாயை லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த நிலத்தை அந்த நிறுவனத்திற்கு மாற்றும் நடவடிக்கைகளுக்கு உதவியதற்காகவே, இந்தத் தொகை லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.