
அரச வாகனத்தைத் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முறையற்ற வகையில் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவ முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, இன்று (24) சிங்கள மொழி அரச நாளிதழ் ஒன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரி விளம்பரம் செய்துள்ளார்.
சுமார் 6.6 மில்லியன் ரூபாயை அரசின் ஒருங்கிணைந்த நிதியத்திற்கு (Consolidated Fund) செலுத்துமாறும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்புக் கோரி விளம்பரங்களை வெளியிடுமாறும் செப்டம்பர் 29 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையிலேயே இந்த மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசினால் வழங்கப்பட்ட வாகனத்தைத்தை, தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை பௌசி மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது.
அவரது இந்தச் செயலை, பொது நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட ஒரு ‘முழுமையான துரோகம்’ என்று நீதிமன்றம் கூறியது.
தலைமை நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
சிலோன் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவின் மீதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், ‘சிலுமின’ (Silumina), ‘சண்டே அப்சர்வர்’ (Sunday Observer) மற்றும் ‘தினகரன்’ (Thinakaran) ஆகிய அரச நாளிதழ்களில், அந்த வாகனத்தின் புகைப்படத்துடன் கூடிய அரைப் பக்க மன்னிப்பு விளம்பரங்களை வெளியிடுமாறும் பௌசிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.



