தலைப்புச் செய்திகள்

ஒலுவில் அன்சாரி பள்ளிவாசல் இடைக்கால நிர்வாக சபை நியமனத்துக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு; பிரதேச செயலாளர் தான்தோன்றித்தனமாக நடந்துள்ளார் எனவும் குற்றச்சாட்டு

– அஹமட் –

ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு நிருவாக சபைபொன்று இருக்கத்தக்கதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தான்தோன்றித்தனமாக, இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமித்துள்ளதாகவும், இது – குறித்த பள்ளிவாசல் தொடர்பில் வக்பு சபை வழங்கிய தீர்ப்புக்கு மாறானது எனவும், அந்தப் பள்ளிவாசலின் மஸுறா சபைத் தலைவர் பொறியியலாளர் ஐ.எல். ஹைதர் அலி குற்றம்சாட்டினார்.

இந்த நியமனத்துக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாங்கள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒலுவில் அன்சாரி ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; “இது சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசல். இந்த இடைக்கால சபைக்கான உறுப்பினர்களை பிரதேச செயலாளரே தெரிவுசெய்து வழங்கினார். இந்த நியமனம் தொடர்பில் பிரதேச செயலாளரைச் சந்தித்து பேசினோம். இந்த சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் – தனக்கே உள்ளது என்றும், தான் யாரையும் தெரிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.

எமக்குக் கிடைத்த தகவலின் படி, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தௌஹீத்வாதி என்றும் அவர் வஹாபிசக் கொள்கையைப் பின்பற்றுபவர் எனவும் அறியக் கிடைத்துள்ளது. மேலும், அட்டாளைச்சேனையிலுள்ள தௌஹீத் பள்ளிவாசலொன்றின் தலைவராகவும் அவர் இருந்துள்ளார் எனவும் எமக்கு தெரியவந்துள்ளது. அதனால்தான், எமது பள்ளிவாசலின் இடைக்கால சபைக்கு – தான் பின்பற்றும் தௌஹீத் கொள்கையுடையவர்களை மட்டும் பிரதேச செயலாளர் தெரிவு செய்துள்ளார்.

ஒரு பிரதேச செயலாளர் இவ்வாறானதொரு மோசமான செயலைச் செய்திருக்கக் கூடாது. இது சமூகத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும் செயற்பாடு. எனவே, இவரை இந்தப் பிரதேசத்திலிருந்து உடனடியாக மாற்ற வேண்டும்.

இதேவேளை, இந்த நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சட்டவிரோதமான இந்த இடைக்கால சபை நியமனத்துக்கு எதிராக – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருக்கிறோம். அதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், வக்பு சபையின் 07 உறுப்பினர்கள் மற்றும் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோரை எதிராளிகளாகக் குறிப்பிட்டுள்ளோம்” என்றார்.

மேலும், ஒலுவில் பிரதேசத்திலுள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதியொருவரும், இந்த இடைக்கால சபை நியமனத்தின் பின்னணியில் உள்ளார் எனவும் பொறியியலாளர் ஹைதர் அலி குற்றம்சாட்டினார்.