
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எதிராக – நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்குக் கோப்பு ஒன்றை, கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன அனுப்பி வைத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்துள்ளதாகத் தெரிவித்த நீதவான், நீதித்துறையை பொலிஸார் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கம்பஹா பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், ஒரே நபர் மீது போதைப்பொருள் தொடர்பான இரண்டு வழக்குகளைத் தொடர்ந்ததிலிருந்து, இந்தச் சிக்கல் உருவானது.
இந்த வழக்குகள் முறையான காரணமின்றித் தொடரப்பட்டவை என்று கண்டறிந்த நீதவான், மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினர், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடாக மொத்தம் 200,000 ரூபாயைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
மேலும், அப்பாவிப் பொதுமக்கள் மீது நியாயமற்ற வழக்குகளைத் தொடர வேண்டாம் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில், நாடு தழுவிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறும் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் பணித்திருந்தது.
இருப்பினும், ஒக்டோபர் 21 அன்று இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தபோது, மேல் மாகாண வடக்கு வலயத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரால், ஒக்டோபர் 19 அன்று வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பொலிஸ் தரப்பினர் சமர்ப்பித்தனர். இவை மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியவை.
இந்த ஆவணத்தை நிராகரித்த நீதவான், இலங்கை முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொருந்தும் வகையில் – அறிவுறுத்தல்களை வெளியிடுமாறுதான், தனது ஆரம்ப உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டினார்.
“இது என்னை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்” என்று நீதவான் பகிரங்க நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாக பிபிசி சிங்களச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவதற்கு சுமார் ஐந்து மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும், பொலிஸார் அதனைச் செய்யத் தவறியதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட வழக்குக் கோப்புகளை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.



