
எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வரும் பட்சத்தில் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், அவரின் செயலாளர் இந்தக் கடிதத்தைத் தயாரித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்ஷவிடம் இந்தக் கடிதத்தை ஒப்படைத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2010-ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசிக்க அனுமதி கோரியபோது, தான் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆலோசனையை இந்தக் கடிதத்தில் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
“உனக்கு விருப்பமென்றால் அரசியலில் ஈடுபடு. ஆனால், சிறை செல்லவும், துன்பங்களை அனுபவிக்கவும் தயாராக இரு. எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தான் அரசியலில் நுழைந்த ஆரம்ப காலத்தில், நாமல் பிறப்பதற்கு முன்பே, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைவாசம் அனுபவித்த தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த ஆலோசனையை வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
“அக்காலத்தில், நீதித்துறையின் மீது மட்டுமே நான் நம்பிக்கை வைத்திருந்தேன். மற்றவர்கள் என்ன சொன்னாலும், நீயும் நீதித்துறையின் மீது மட்டுமே நம்பிக்கை வை” என்று அவர் எழுதியுள்ளார்.
நாமல் பிறந்த அதே நவலோக வைத்தியசாலையில் தானும் தனது மனைவ ஷிரந்தியும் சிகிச்சை பெற்று வருவதாகவும், தங்கள் மகன்களான யோஷிதாவும் ரோஹித்தாவும் தங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
யோஷிதாவுக்கு எதிரான வழக்குகளில் ஒன்று, அவர் கடற்படையில் இணைந்ததிலிருந்து உருவானது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தனது ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில், தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் பிள்ளைகளும் அடங்குவர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“எப்படியிருப்பினும், எதிர்காலத்தில் உனக்கு அதிகாரம் கிடைக்கும்போது, அவர்களைப் பழிவாங்க முற்படாதே” என்று அவர் எழுதியுள்ளார். “பெற்றோர்கள் செய்யும் செயல்களுக்குப் பிள்ளைகள் பொறுப்பல்ல என்பது எனது கருத்து. பழிவாங்காமல் இருப்பதுதான் ராஜபக்ஷ குடும்பத்தின் வழிமுறை மற்றும் பாரம்பரியம்.”
துன்புற்ற லட்சக்கணக்கான மக்களுக்காக நாட்டை மீட்டெடுத்ததற்காக, தனது குடும்பத்தை சமூகம் குற்றவாளியாகக் கருதாது என்று ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
“தேர்தலில் நாம் தோல்வியடைந்திருந்தாலும், இந்த நாட்டு மக்கள் நன்றியுணர்வுள்ளவர்கள் என்ற நம்பிக்கையுடன் செயல்படு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



