
அரசுக்கு மொத்தம் 275 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் நான்கு முன்னாள் சிரேஷ்ட சுகாதார அதிகாரிகள் மீது – நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை’ (TISL) அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
மருந்து கொள்முதலில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில், மார்ச் 27, 2026 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின்படி செலுத்த வேண்டிய தொகையை, சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்தே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை’ தெரிவித்துள்ளது.
அந்தத் தீர்ப்பின்படி, ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாயைச் செலுத்தவும்; சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் (NMRA) முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, வைத்தியப் பொருட்கள் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
நிறுவப்பட்ட நடைமுறைகளைப் புறக்கணித்து – அவசரமாக மருந்துகளைக் கொள்முதல் செய்ய வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்க – சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டறிந்தது.
மேலும், ஒரு தனியார் விநியோகஸ்தரிடமிருந்து கொள்முதல் செய்வதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிந்தே கொள்முதல் விதிமுறைகளை மீறியதாகவும், இதன் மூலம் அரசியலமைப்பின் 12(1) வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள சட்டத்தின் சமமான பாதுகாப்பைப் பெறும் அடிப்படை உரிமையை அவர்கள் மீறியுள்ளதாகவும் நீதிமன்றம் தீர்மானித்தது.
குறிப்பிட்ட தொகைகள் செலுத்தப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்றம் மற்றும் சுகாதார அமைச்சிடம் உறுதிப்படுத்திக்கொண்டதாக ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை’ தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் இதற்கென ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவில்லை என்றாலும், அந்தத் தொகைகள் உடனடியாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.



