தலைப்புச் செய்திகள்

ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் 23 வருடங்களின் பின்னர் வெளியேறின

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான போரில் ஈராக்கில் 4,500 அமெரிக்கர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்கப் படைகளின் இந்த வெளியேற்றத்தை ஈரானும் அதன் கூட்டாளிகளும் ஒரு வெற்றியாகக் கொண்டாடுகின்றனர்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் 2024-ல் இந்த வெளியேற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஈரானுக்கும் அதன் சக்திவாய்ந்த கூட்டாளிகளுக்கும் தடையற்ற செயல்பாட்டு வாய்ப்பை இந்த வெளியேற்றம் வழங்கக் கூடும் என்று, ஈராக் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஈரான் ஆதரவுடைய ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பான ‘இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் இன் ஈராக்’ (Islamic Resistance in Iraq) அமைப்பின் தளபதியான அபு மொஜ்தபா அல்-யாசிரி, அமெரிக்காவின் இந்த வெளியேற்றத்தை; “ஈராக்கிய இஸ்லாமிய எதிர்ப்புப் படைகள் மற்றும் கண்ணியமிக்க ஈராக்கியர்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி; அதேவேளையில் அமெரிக்கத் திட்டத்திற்கு ஏற்பட்ட படுதோல்வி” என்று விவரித்துள்ளார்.


சதாம் ஹுசைனை வீழ்த்துவதற்காக 2003-ல் அமெரிக்கப் படைகள் ஈராக் மீது படையெடுத்தன. பின்னர் அந்நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களின் தலைமையிலான அரசாங்கத்தை அமைத்து, பல ஆண்டுகள் நீடித்த கிளர்ச்சிக்கு எதிரான போரில் ஈடுபட்டன. இறுதியாக 2011-ஆம் ஆண்டின் இறுதியில் அங்கிருந்து வெளியேறின.

அதன்பிறகு மூன்றாண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே, 2014 முதல் 2017 வரை நடைபெற்ற பெரும் போரில் தீவிரவாத அமைப்பான ‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (Islamic State) குழுவை வீழ்த்த ஈராக் படைகளுக்கு உதவ அமெரிக்கப் படைகள் மீண்டும் அங்கு வந்தன.