
‘கு’ஷ்’ மற்றும் ‘ஹஷிஷ்’ ஆகிய போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற மூன்று வெளிநாட்டுப் பெண் பயணிகளை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 85 மில்லியன் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்கள் 31, 36 மற்றும் 38 வயதுடையவர்களாவர். இவர்கள் தாய்லாந்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஆவர்.
இவர்கள் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ‘தாய் ஏர்வேஸ்’ விமானம் மூலம் இன்று (20) அதிகாலை 12.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் கொண்டு வந்த உடமைகளில், காற்று புகாதவாறு அடைக்கப்பட்ட பொட்டலங்களில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் கொலாஜன் (collagen) கொண்ட பாட்டில்கள் போலவும், சவர்க்காரக் கட்டிகள் போலவும் தோற்றமளிக்கும் வகையில் – இவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 05 கிலோ 214 கிராம் ‘குஷ்’ மற்றும் 02 கிலோ 472 கிராம் ‘ஹஷிஷ்’ ஆகியவை அடங்கும்.
கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும், அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.



