
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களான யோஷித ராஜபக்ஷ மற்றும் ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் -நாவலப்பிட்டியின் டொலோஸ்பேஜ் (Dolosbage) பகுதியில் உள்ள 135 ஏக்கர் தேயிலைத் தோட்டத்தின் உரிமையைப் பெறுவதற்காக, மூன்று முஸ்லிம் நபர்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, ‘குற்றச் செயல் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் விசாரிக்கும் பொலிஸ் பிரிவு’ தீர்மானித்துள்ளது.
‘லஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி’ (Citizens’ Power Against Bribery, Corruption and Waste) என்ற அமைப்பு வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பின் தலைவர் கமந்த துஷார, ஓகஸ்ட் 20 அன்று – சம்பந்தப்பட்ட பிரிவின் பணிப்பாளரிடம் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என முறைப்பாட்டாளருக்கு கூறப்பட்டுள்ளது.
முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்கள் தொடர்பான ஆவணச் சான்றுகளுடன், செப்டம்பர் 14 அன்று காலை 09 மணிக்கு, பொலிஸ் தலைமையகத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறும் முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டியின் டொலோஸ்பேஜ் பகுதியில் அமைந்துள்ள இந்த சொத்து, ‘ஓசா பிளான்டேஷன் (பிரைவேட்) லிமிடெட்’ (Osa Plantation (Pvt) Ltd) நிறுவனத்தின் ‘கெல்லி குரூப்’ (Kelly Group) தேயிலைத் தோட்டத்திற்குச் சொந்தமான சுமார் 135 ஏக்கர் வளமான நிலத்தையும், 1918 இல் கட்டப்பட்ட சுமார் அரை ஏக்கர் பரப்பளவிலான ஆடம்பரமான காலனித்துவ பாணி பங்களாவையும் உள்ளடக்கியது என்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின்படி, உண்மையான உரிமையாளர்களை மறைக்கும் வகையில் ‘ஓசா பிளான்டேஷன்’ (PV 61746) நிறுவனத்திற்கு வேறு மூன்று நபர்களை ‘பெயரளவு பணிப்பாளர்களாக’ (dummy directors) நியமித்து, காலஞ்சென்ற அருண விதானகே (கஜ்ஜா) மற்றும் நெவில் என்ற நபர் மூலமாக 2021 டிசம்பர் 11 அன்று இந்தச் சொத்து கையகப்படுத்தப்பட்டுள்ளது.
உரிமைப் பத்திரம் எண் 1386 மற்றும் வரைபடம் எண் 787 உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய உத்தியோகபூர்வ ஆவணங்களையும், விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க – ஏற்கனவே முறைப்பாட்டாளர் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
CSN தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக வெளிநாட்டு நாணயத்தை சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்தமை (money laundering) மற்றும் அரச அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஈட்டிய நிதியைக் கொண்டு – மேற்படி தோட்டத்தை வாங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளை யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் எதிர்கொண்டுள்ளனர்.



