
செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 119 அவசரகால சேவைக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸார் வியாழக்கிழமை (10) முதல் புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான வீடியோ சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் 160ஆவது வருட கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஆதரவுடன் இந்த முயற்சி தொடங்கப்படவுள்ளது.
நிரந்தரமான ஒரு குறுகிய எண் அறிமுகப்படுத்தப்படும் வரை, செவித்திறன் குறைபாடுள்ள நபர்கள் முதலில் 011-2809980 என்ற எண்ணை தங்கள் கைபேசியில் சேமிப்பதன் மூலம், இந்த சேவையைப் பெறலாம்.
பின்னர் அவர்கள் அந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் ஒலி அழைப்பை மேற்கொள்ள வேண்டும். அழைப்பு தானாகவே துண்டிக்கப்படும். அதன் பிறகு அழைப்பவரின் கைபேசிக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படும்.
அழைப்பவர் அந்த இணைப்பைத் திறந்து, ‘Join Browser’ என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ‘Join Meeting’ என்பதைத் தேர்ந்தெடுத்து, பொலிஸுடனான வீடியோ அழைப்பில் இணைந்து, தங்கள் முறைப்பாட்டினைச் சமர்ப்பிக்கலாம்.
செவித்திறன் குறைபாடுள்ளவர்களின் பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்துவதற்காகவே, இந்த சேவை குறிப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.



