
அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட வாகன இலக்கத் தகடுகள் (number plates) வழங்கப்படும் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிவேரியப் பகுதியில், தனது புதிய மின்சார கார்-இன் பச்சை நிற இலக்கத் தகட்டைக் கண்ட போக்குவரத்துப் பொலிஸார், தன்னை வழிமறித்து விசாரணை நடத்தியதாக, அந்தக் கார்-இன் உரிமையாளர், அண்மையில் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த இலக்கத் தகடு போலியானது அல்ல என்றும், அது மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டது என்றும் நிரூபிப்பதற்காக, வாகனப் பதிவு உறுதிப்படுத்தல் தகவல் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்ததாக, அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
புதிய வகை இலக்கத் தகடுகள் குறித்து, பொலிஸாருக்கு விழிப்புணர்வு இல்லாமையே இச்சிக்கலுக்குக் காரணம் என்று – அந்த மின்சார வாகன உரிமையாளர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தப் பின்னணியில், மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் என்று, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படைத் துணைத் தளபதி துஷார பெனாண்டோ கூறியுள்ளார்.
ஏனைய வாகனங்களுக்குத் தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் நிற இலக்கத் தகடுகளே வழங்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இச்சிக்கலுக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக, நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும், ஒரு சிறப்பு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



