ஆச்சரியத்தின் நுழைவாயில்

🕔 March 11, 2016

Article - 72 - 01
னிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற கேள்விக்கு, புத்தகம் என்று பதிலளித்தார் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன். கற்பதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் ஆதாரங்களாக புத்தகங்களே உள்ளன. ஒவ்வொரு புத்தகமும் அறிவுத் தேடலுக்கான ஒரு வழியைத் திறந்து விட்டுக்கொண்டேயிருக்கிறது. புத்தகங்களின் பெறுமதி பற்றித் தெரிந்தவர்களிடம் – அவர்களுடைய வாழ்வின் பெரும் செல்வம் எது எனக் கேட்டால், அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் புத்தகங்களைத்தான் சொல்வார்கள்.

அதனால்தான், ஒரு நூலகத்தையும் ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை என்றார் சிசரோ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமில் வாழ்ந்த மார்கஸ் ருல்லியஸ் சிசரோ ஒரு தத்துவஞானி, கவிஞர், எழுத்தாளர் என்று பன்முக ஆளுமை கொண்டவர். தேடல் உள்ளவர்களுக்கு நூலகம் என்பது ஞானத்தின் பெருங்கடலாகும்.

அந்தவகையில், ஓர் அழகிய பெண்ணின் அறிவுத் திமிர் போல எழுந்து நிற்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகமானது, ஆச்சரியத்தின் நுழைவாயிலாகவே நமக்குத் தெரிகிறது. சாதாரணமாக, நூலகங்கள் பற்றி – நமது எண்ணங்களில் படிந்து கிடக்கும் படங்களையெல்லாம், அழித்தெறிந்து விட்டு, நவீன தோற்றத்துடன் காட்சி தருகிறது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகம்.
நூலகங்களைப் போலவே, நூலகங்களின் வரலாறுகளும் சுவாரசியமானவையாகும். உலகின் முதல் நூலகத்துக்கான ஆரம்பம் 3300 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்து விட்டதாகத் தெரியவருகிறது.

மொசப்பத்தேமியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கில்தான் உலகின் முதல் நூலகம் உருவானதாகக் கூறப்படுகிறது. இப்போதைய நாடுகளான ஈரான், ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை உள்ளடங்கிய பெரும் நிலப்பரப்பாக பண்டைய மொசப்பத்தேமியா இருந்தது. அங்கு நான்கு பேரரசுகள் இருந்தன. சுமேரியர், பாபிலோனியர், அசிரியர் மற்றும் அக்காத்தியர் – அந்தப் பேரரசுகளின் சொந்தக்காரர்களாக இருந்தனர்.

அசிரிய பேரரசின் நிர்வாகத்தில் அப்போது பாரிய குளறுபடி ஏற்பட்டது. அதனைச் சீர் செய்வதற்காக கி.மு. 13ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த அப்போதைய மன்னர் சென்னாசெர்ப் என்பவர், அரசாங்கத்தின் முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் களிமண் தட்டுக்களில் எழுதி, அவற்றினை சூளைகளில் சுட்டுப் பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். இதற்கிணங்க, பெறுமதியான ஆவணங்கள் – இவ்வாறு களிமண் தட்டுக்களில் எழுதப்பட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இப்படி பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை ஒரே இடத்தில் வைப்பதற்குத் தீர்மானித்தார் கி.மு. 07 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அசிரிய பேரரசின் இறுதி மன்னரான அசுர்பானிபல். இதற்கிணங்க, அசிரியாவின் தலைநகரான நினிவாஹ் என்னுமிடத்தில் அந்த ஆவணங்களையெல்லாம் துறைவாரியாகப் பிரித்து வைத்துப் பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். அசிரியாவின் தலைநகரான நினிவாஹ் என்பது இப்போதைய ஈராக் நாட்டின் மொசூல் நகரமாகும். இந்த ஆவணங்களைப் பார்வையிடுவதற்கு பொதுமக்களும் அனுமதிக்கப்பட்டனர். அந்தவகையில், உலகில் அமைக்கப்பட்ட முதல் நூலகம் இதுதான் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த நூலகமானது The Royal Library of Ashurbanipal என்று அழைக்கப்படுகிறது.Article - 72 - 10 - Copy

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகத்துக்கு ‘அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம்’ என்று பெயர். மிகப்பெரும் பரப்பில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நிமிந்து நிற்கும் இந்த நூலகத்தில், இன்றைய கணக்கின்படி 113,346 எனும் மலைக்க வைக்கும் எண்ணிக்கையான புத்தகங்கள் உள்ளன. ஒவ்வொரு புத்தகத்தையும் ஒரே நாளில் வாசித்து முடித்தாலும், தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்திலுள்ள புத்தகங்கள் எல்லாவற்றினையும் படித்து முடிப்பதற்கு, ஆகக்குறைந்தது 310 வருடங்கள் தேவையாக இருக்கின்றன. ஒரு மணிதனின் ஆயுளில் வாசித்து முடித்து விட முடியாதளவு நூல்களைக் கொண்ட பிரம்மாண்டமானதொரு சமுத்திரம் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகமாகும்.

1995 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஒரு அறையில், வெறும் 2000 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகம். பின்னர் இடம் மாறி, இடம் மாறி – இப்போது தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் ஒலுவில் வளாகத்தில் அதற்கென்று அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான நவீன கட்டிடத்துக்கு வந்திருக்கிறது.

இலங்கையில் எந்தப் பல்கலைக்கழக நூலகத்திலும் இல்லாத பல்வேறு சிறப்பம்சங்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளதாகக் கூறுகிறார், இந்தப் பல்கலைக்கழகத்தின் நூலகர் எம்.எம். றிபாயுடீன். இப் பல்கலைக்கழகத்தின் ஆரம்பம் முதல், றிபாயுடீன் கடமையாற்றி வருகிறார். 20 வருடங்களுக்கும் அதிகமாக, இங்குள்ள புத்தகங்களுடன் வாழ்ந்து வரும் றிபாயுடீனிடம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகம் பற்றிய ஏராளமான கதைகள் உள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரமிக்க வைக்கும் நூலகத்திலுள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று, அங்குள்ள அரும்பொருட் காட்சியகமாகும். ‘இலங்கையிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழக நூலகத்திலும், அரும் பொருட் காட்சியகம் இல்லை. தென்கிழக்குப் பலகலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தில் மட்டுமே அரும்பொருட் காட்சியகம் ஒன்று உள்ளது. எங்கள் பல்கலைக்கழக நூலகத்தின் தனித்துவங்களில் இதுவும் ஒன்றாகும்’ என்கிறார் நூலகர் றிபாயுடீன்.Article - 72 - 03

நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள் இந்த அரும்பொருட் காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள. இவை நமது கலாசாரங்களையும், பாரம்பரியங்களையும் எடுத்துச் சொல்லும் வகையிலானவை.

இந்த அரும்பொருட் காட்சியகம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எவ்வாறு கிடைத்தது என்பதற்குப் பின்னணியில் ஒரு கதை உள்ளது.

1997 ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையில் தேசிய மீலாத் விழா நடைபெற்றது. மீலாத் விழாவினை மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரும், அப்போதைய அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் முன்னின்று நடத்தினார். அதற்கு முன்னதாக விழாவுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வந்தன. விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் அந்தப் பகுதியில் அமையப்பெற்றிருந்த ஒவ்வொரு அரச நிறுவனமும் ஏதாவது பங்களிப்பினை வழங்குமாறு கோரப்பட்டன. அந்தவகையில், நமது கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றினை வெளிப்படுத்தும் வகையிலான அரும்பொருட்களைச் சேகரித்து காட்சிப்படுத்துமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் அஷ்ரப் உத்தரவிட்டார். அதற்கிணங்க அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஊரிலும், கிராம உத்தியோகத்தர்களின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று, அவ்வாறான பொருட்கள் சேகரிக்கப்பட்டு மீலாத் விழாவின் போது காட்சிப்படுத்தப்பட்டன.

இதன்பின்னர், அந்தப் பொருட்களை வைத்து ‘கலாசார அரும்பொருட் காட்சியகம்’ ஒன்று உருவாக்கப்பட்டது. அது இப்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் அமையப் பெற்றுள்ளது.Article - 72 - 02

நமது மூதாதையர் பயன்படுத்திய ஆடைகள், ஆபரணங்கள், நாணயங்கள், தொழில் உபகரணங்கள், நூல்கள் என்று, இப்போதைய தலைமுறையினர் இழந்து விட்ட ஏராளமான பொருட்களின் சேகரங்கள், இந்த அரும்பொருட் காட்சியகத்தில் உள்ளன.

நமது முன்னோர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பார்த்து மகிழ்வதற்கான மாபெரும் சந்தர்ப்பத்தினை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் நமக்கும், நமது சந்ததியினருக்கும் வழங்கியுள்ளது.

இந்த நூலகத்தில் விசேட தேவையுடையவர்களுக்கென்று ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பகுதியும் உள்ளது. விசேட தேவையுடையோர் நூலகத்தினுள் சுயமாகவும், இலகுவாகவும் சென்று வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டிட நிர்மாணம், மின்சாரத்தில் இயங்கும் சக்கர நாற்காலிகள், விசேட தேவையுடையோருக்கு வசதியான வகையில் அமைக்கப்பட்டுள்ள படிக்கும் இடங்கள் என்று, சிறப்பான வசதிகளுடன் நூலகத்தின் கீழ்மாடியின் முன்பகுதியிலேயே, விசேட தேவையுடையோருக்கான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

‘விசேட தேவையுடைவர்களுக்கென்று இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பகுதி, இலங்கையிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழக நூலகத்திலும் இல்லை’ என்று, உறுதி செய்கிறார் நூலகர் றிபாயுடீன்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 3500 ஆகும். விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என்று ஏனையோர் 500 பேர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழக நூலகத்தில் அங்கத்துவம் பெற்றுக்கொள்ள முடியும். ஆராய்ச்சியில் ஈடுபடும் வெளியாருக்கும் தற்காலிக அங்கத்துவத்தை நூலகம் வழங்குகிறது.

இந்த நூலகத்தில் அமைந்துள்ள இன்னுமொரு சிறப்பான விடயம் பாடநூல்களை நீண்ட காலத்துக்கு இரவலாக வழங்கும் பகுதியாகும். இந்தப் பகுதிக்கு Textbook seuencce என்று பெயர். சாதாரணமாக, நூலகங்களில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே புத்தகங்களை இரவலாகப் பெறமுடியும். ஆனால், மாணவர்களின் பாடப் புத்தகங்களைக் கொண்ட Textbook seuencce எனும் பகுதியில், மாணவர்கள் ஒரு கல்விப் பருவகாலத்துக்கு, நீண்ட கால அடிப்படையில் புத்தகங்களை இரவலாகப் பெற்றுக்கொள்ளலாம். ஆகக்குறைந்தது 04 மாதங்களுக்கு அந்தப் புத்தகங்களை மாணவர்கள் தம்முடன் தொடர்ச்சியாக வைத்திருந்து படிக்க முடியும்.Article - 72 - 09 - Copy

இலங்கையிலுள்ள பல்கலைக்கழக நூலகங்களில், இவ்வாறானதொரு பகுதி தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் மாத்திரமே உள்ளது என்கிற தகவலையும் நூலகர் றிபாயுடீன் எம்மோடு பகிர்ந்து கொண்டார்.

Textbook seuencce பகுதிக்காக, கடந்த அரசாங்கத்தில் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘புத்தகங்களை இரவல் கொடுப்பவன் முட்டாள். அப்படி இரவல் பெற்ற புத்தகங்களை திருப்பிக் கொடுப்பவன் அவனை விடவும் முட்டாள்’ என்கிறது ஓர் அரேபியப் பழமொழி. இந்தப் பழமொழிக்கான உள் அர்த்தம் மிகவும் விசாலமானது. புத்தகங்களின் பெறுமதியை இந்தப் பழமொழி மிக அற்புதமாக விளக்குகின்றது.

புத்தகங்களை நேசிப்பவர்களால் மட்டுமே, அவற்றினைச் சேகரித்து வைக்க முடியும். அவ்வாறானவர்கள் தமது புத்தகங்களை இழப்பதற்குத் துணிய மாட்டார்கள். அடுத்தவருக்கு தமது வாழ்நாள் சேகரமான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு, சமூகத்தை உச்சபட்டமாக நேசிப்பவர்களால் மட்டுமே முடியும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் தனிப்பட்ட மனிதர்களால் அன்பளிப்புச்செய்யப்பட்ட நூல்களுக்கென்றே தனியானதொரு பகுதி உள்ளது. நூல்களை அன்பளிப்புச் செய்தவர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களுடன் அவர்களின் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் மர்ஹும் அல்லாமா எம்.எம். உவைஸின் நூல்கள்தான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முதன்முதலாகக் கிடைத்த தனிநபர் நூல் அன்பளிப்பாகும். பேராசிரியரின் மரணத்தின் பின்னர், அவருடைய குடும்பத்தார், அவரின் நூல் சேகரிப்பில் ஒரு தொகுதியினை, தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்துக்கு அன்பளித்திருந்தனர்.

புலவர்மணி; ஏ.எம். சரிபுத்தீன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ். காரியப்பர், பேராசிரியர் செவ்வரெத்தினம், நீதிபதி ஹுசைன், முன்னாள் அதிபர் எம்.எம். மொஹிதீன், டொக்டர் ஏ.எம். அபூபக்கர், கல்விப் பணிப்பாளர் யூ.எல். அலியார், பேராசிரியர் சுல்தான் பாவா, புலமையாளர் எம்.எம். மஹ்றூப், பேராசிரியர் எஸ். தில்லைநாதன், நூலகர் எஸ்.எம். கமால்தீன், கல்விமான் எஸ்.எச்.எம். ஜெமீல் மற்றும் கவிஞர் ஜின்னா சரிபுத்தீன் ஆகியோர் தமது நூல்களில் கணிசமான பகுதியினை தென்கிழக்குப் பலக்கலைக்கழக நூலகத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளனர். இவர்களின் நூல்கள் தனித்தனியாக அவர்களின் பெயர்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தனிநபர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட மொத்த நூல்களின் தொகை இன்றைய கணக்கின்படி 10 ஆயிரத்து 887 ஆகும். Article - 72 - 05

நூல்களை அன்பளிப்புச் செய்கின்ற எல்லோருக்கும் இந்த மரியாதை கிடைப்பதில்லை. அதாவது, அவர்கள் அன்பளிப்புச் செய்த நூல்களை அவர்களின் பெயர், புகைப்படத்துடன் காட்சிப்படுத்துவதில்லை.

அப்படியென்றால், இதற்கான நிபந்தனைகள் ஏதாவது இருக்கின்றனவா என்று நூலகர் றிபாயுடீனைக் கேட்டோம்.

‘ஆம். 500க்கு மேற்பட்ட நூல்களை அன்பளிப்புச் செய்கின்ற தனிநபர்களின் நூல்கள்தான் தனியாகத் தெரியும் வகையில், அவர்களின் பெயர், புகைப்படத்துடன் நூலகத்தில் காட்சிப்படுத்தப்படும். இதில் இன்னுமொரு நிபந்தனையுமுள்ளது, அவர்கள் வழங்கும் நூல்களில் 60 வீதமானவை அரிதான நூல்களாக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே, அவர்களுக்கு இவ்வாறான தனி மரியாதை வழங்கப்படும்’ என்றார் அவர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்திலுள்ள புத்தகங்களைப் படிக் கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள். அந்த நூலகத்தினை தமது வாழ்நாளில் ஒரு முறைவாது பார்க்கக் கிடைத்தவர்கள் அதிஷ்டசாலிகள்.

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவர் யாராவது இருந்தால், அவரை எனக்குக் காட்டுங்கள். அவர்தான் எனது வழிகாட்டி என்றாராராம் ஜுலியஸ் சீசர்.

ஆயிரமாயிரம் புத்தகங்களை வாசிப்புக்காகக் தருவதற்குத் தயாராக இருக்கும் அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் – வழிகாட்டிகளுக்கெல்லாம், வழிகாட்டியாக நிமிர்ந்து நிற்கிறது.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (10 மார்ச் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்