
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றிக்கொண்டதாாக, அமைச்சரொருவர் அண்மையில் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என, நியூஸ்வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஓகஸ்ட் 30 திகதியிட்டு நியூஸ்வயர் செய்தி நிறுவனத்திற்கு – அர்ஜுன மகேந்திரன் அனுப்பிய கடிதத்தில், இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று குறிப்பிட்டுள்ளார்.
“நான் – எனது பெயரை மாற்றிக்கொண்டதாக, இலங்கை அமைச்சர் ஒருவர், ஒரு பொது அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று அர்ஜுன மகேந்திரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“அத்தகைய குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்பதை உங்களுக்கு – நான் தெரிவிக்க விரும்புகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் அந்தக் கடிதத்தில் “லக்ஷ்மன் அர்ஜுன மகேந்திரன்” என்ற பெயரில் கையொப்பமிட்டு, சிங்கப்பூர் முகவரியையும் வழங்கியுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாகத் தேடப்பட்டு வரும், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், தனது பெயரை “ஹர்ஜன் அலெக்சாண்டர்” என மாற்றிக்கொண்டதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் கூறியிருந்தார்.
பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும், சிங்கப்பூரிலிருந்து அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதிலுள்ள தடைகளுக்கு மத்தியில் – அவரை இலங்கைக்குத் திரும்பக் கொண்டுவர, மாற்று சட்ட வழிகளை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி பத்திர வழக்கு தொடர்பாக, அர்ஜுன மகேந்திரனை இலங்கை அரசு தேடி வருகிறது.
தொடர்பான செய்தி: மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் பெயர் மாற்றியுள்ளது தெரியும்: அந்தப் பெயர் இதுதான்



