தலைப்புச் செய்திகள்

இன முரண்பாடுகளை ஏற்படுத்த விரும்புவோர், டொக்டர் சுகுணனின் பின்னணியில் உள்ளார்களா என்கிற சந்தேகம் உள்ளது: முன்னாள் எம்.பி ஹரீஸ்

– பாறுக் ஷிஹான் –

ல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சுகுணன் – முஸ்லிம்கள் மீது கலாசாரத் தாக்குதல் நடத்துவதன் பின்னணியில் மொசாட் உள்ளதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்பு – கிழக்கு மாகாணத்தில் பொத்துவிலிலும், நாட்டின் பல நகரங்களிலும் மீண்டும் கால் ஊன்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனையில் நேற்று சனிக்கிழமை (15) இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயங்களைக் கூறினார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்;

1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையேயிருந்த பரஸ்பர நட்பையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைக்க ‘மொசாட்’ செய்த வேலையே காரைதீவு சந்தியில் இரு சமூகங்களையும் பிரித்தமையாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அன்று ஆயுதமேந்திய சிலர் எடுத்த முடிவுகள் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கே பாரிய சவாலாக அமைந்ததை நினைவூட்டினார்.

”தற்போது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தமது சீருடையுடன் இணைந்ததாக தலையையும் கால்களையும் மறைக்கும் வகையில் ஆடையணிகின்தற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இனப் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என விரும்புவோரின் பின்னணியில் டொக்டர் சுகுணன் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” எனவும் ஹரீஸ் கூறினார்.

கல்முனைப் பிராந்தியத்தில் உருவெடுத்துள்ள இந்தச் சர்ச்சை தமிழ்–முஸ்லிம் ஐக்கியத்தை விரும்பும் அனைவருக்கும் பெரும் கவலையளிப்பதாகவும் ஹரீஸ் குறிப்பிட்டார். மேலும், தமிழ் அரசியல் தலைமைகள் உடனடியாக இதில் தலையிட்டுச் சுமுகத் தீர்வைக் காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இது குறித்துத் தான் மனோ கணேசன் எம்.பி, இரா.சாணக்கியன் எம்.பி மற்றும் பல தமிழ் அரசியல்வாதிகளுடன் தொலைபேசியில் கலந்துரையாடி, சமூக நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறி எந்தவொரு அரச நிறுவனமும் முடிவெடுக்க முடியாது என்றும் ஹரீஸ் மேலும் கூறினார்.

எனவே, சட்டநடவடிக்கைகளுக்குச் செல்வதற்கு முன்பாக, அரசியல் மற்றும் நிர்வாக மட்டத்தில் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றார்.

அதேவேளை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.