
– பாறுக் ஷிஹான் –
புத்தங்கல பகுதியில் டிப்பர் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் புறநகர் பகுதியான புத்தங்கல நான்கு வழி சந்தி பகுதியில் குறித்த விபத்து நடந்தது. படுகாயமடைந்த இருவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை(26) இரவு சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதில் பயணம் செய்த மூன்று பேரில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் உயிர் தப்பினார்கள்.
குறித்த விபத்தின் போது டிப்பர் வாகனம் புத்தங்கல பகுதியில் இருந்து பிலிமகல நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சமயம் முச்சக்கர வண்டி பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயப் பகுதியிலிருந்து அம்பாறை பொது வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்ததாக விபத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
குறித்த விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி வழிவிடும் விதியை மீறியதால், பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி – டிப்பர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

விபத்தையடுத்து டிப்பர் வாகன சாரதி – வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் டிப்பர் வாகனத்துடன் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவ்வாறு பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.
முச்சக்கர வண்டி சாரதியான 34 வயதான, ஒரு குழந்தையின் தந்தையான கிருஷாந் சனக என்பவர் விபத்தின் போது சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவர் அம்பாறை நவகம்புர பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
படுகாயமடைந்த அம்பாறை லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த துலஞ்சன இமேஷ், அம்பாறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரவு சுமார் 10.30 மணியளவில் உயிரிழந்தார்.
மேலும் நவகம்புர லயன்ஸ் கழகத்தை சேர்ந்த சுதேஷ் மஹின்சாவும் அவரின் மூன்று வயது மகள் ஹசரி லியாராவும் அம்பாறை பொது வைத்தியசாயில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தின் போது டிப்பர் வாகன சாரதி மதுபோதையில் இருந்தது தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக அம்பாறை மாவட்ட தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.



