தலைப்புச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையம் மீது, ஈரான் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பரக்கா அணுமின் நிலையத்தின் மீது, ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அங்குள்ள ஜெனரேட்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிலையத்தின் உட்புறச் சுற்றுச்சுவருக்கு வெளியே ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கதிரியக்கப் பாதுகாப்பு நிலைகளில் எந்தப் பாதிப்பும் இல்லை எனவும் அபுதாபியின் ஊடக அலுவலகம் X தளத்தில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 8 அன்று அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் மீது தொடர்ந்து ஈரான் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

போர் தொடங்கியபோது, ​​ஈரானின் அண்டை நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்களும் இஸ்ரேலிய சொத்துக்களும் இருப்பதால், அவற்றை குறிவைப்பதாக ஈரான் கூறியது.

இவ்வாறு நடத்தப்பட்டதாக்குதல்களின் பெரும் பாதிப்பை ஐக்கிய அரபு அமீரகமே சந்தித்துள்ளது. இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மோசமாக்கியுள்ளது.

கடந்த வாரம், தங்கள் ஃபுஜைரா துறைமுகத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகம் குற்றம் சாட்டியது.

இதில் மூன்று இந்தியர்கள் காயமடைந்தனர். ஃபுஜைரா பெட்ரோலியத் தொழில் வலயத்திலுள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் – தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஈரான் மீது போர் நடந்தப்பட்ட போது, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ரகசியப் பயணம் மேற்கொண்டதாக அண்மையில் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்திருந்தது. ஆனால், அதனை ஐக்கிய அரபு அமீரகம் மறுத்தது.