
2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, காலி கோட்டைக்கு அருகே நடைபெற்ற அமைதியான போராட்டத்தை பொலிஸ் அதிகாரிகள் கலைத்த சம்பவம் தொடர்பாக, காலி பகுதியின் அப்போதைய பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட மூன்று பொலிஸ் அதிகாரிகள், சட்டத்தரணிகள் குழுவிடம் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கைகளால் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டி, காலி பகுதியைச் சேர்ந்த அஜித் குமார மற்றும் அமரதிவாகர லியனகே ஆகிய இரண்டு சட்டத்தரணிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது – இந்த மன்னிப்பு கோரப்பட்டது.
இந்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளான, காலி பகுதியின் அப்போதைய பிரதி பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜி. வெடசிங்க, காலி பகுதியின் அப்போதைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் காலி பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, அந்தச் சம்பவம் தொடர்பாக மனுதாரர்களிடம் பிரதிவாதிகள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், பிரதிவாதிகள் மனுதாரர்களிடம் முறையாக மன்னிப்புக் கோரி ஒரு எழுத்துப்பூர்வ ஆவணத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தனது கட்சிக்காரர்கள் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்பிறகு, மனு மீதான விசாரணையை முடித்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது.
சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய மூலம் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், 2022 ஜூலை 6 அன்று, பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில், சட்டத்தரணிகள் குழுவினர் காலி கோட்டைக்கு அருகே பதாகைகளைக் காட்டி அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டதாக மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் போராட்டத்தைக் கலைத்து, பதாகைகளைக் கிழித்தெறிந்ததாகவும் மனுதாரர்கள் குற்றம் சாட்டினர்.
பிரதிவாதிகளின் நடவடிக்கைகள் தங்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைகின்றன என்று தீர்ப்பளிக்கக் கோரி, சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.


