
தங்கள் பணம் அனுப்பும் அமைப்புகளில் ஒன்றில் ஏற்பட்ட நாணய மாற்று விகிதப் பிழையின் காரணமாக, சில வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அதிகப்படியான தொகையைப் பெற்றுள்ளனர் என்றும், இதனால் ஏற்பட்ட நிதிப் பாதிப்பு சுமார் ரூ. 656 மில்லியன் என வங்கி மதிப்பிட்டுள்ளதாகவும் அரச வங்கியான – மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட பணம் அனுப்பும் அமைப்பிற்குள், ஒரு நாணயத்தின் நாணய மாற்று விகிதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான இந்தப் பிரச்சினை, மே 2023 முதல் மார்ச் 2026 வரையிலான பரிவர்த்தனைகளைப் பாதித்துள்ளது என்று அந்த வங்கி கூறியுள்ளது.
இந்தப் பிழை சமீபத்தில் கண்டறியப்பட்டு, தற்போது முழுமையாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தப் பிழை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் வங்கி ஒரு உள்ளக ஆய்வைத் தொடங்கியுள்ளதாகவும், செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளதாகவும், மேலும் மத்திய வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் கூறியுள்ளது.
மதிப்பிடப்பட்ட ரூ. 656 மில்லியன் இழப்பு – அதன் நிதி அறிக்கைகளில் ஏற்கனவே முழுமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் வேறு எந்த நிதிப் பாதிப்பும் எதிர்பார்க்கப்படவில்லை எனவும் வங்கி குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் தொடர்பான மீட்பு செயல்முறைகளைத் தொடங்கியுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து நிதியை மீட்பதில் ஏற்கனவே முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் மக்கள் வங்கி கூறியுள்ளது.
வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள், டிஜிட்டல் சேவைகள் மற்றும் வைப்புத்தொகைகள் பாதிக்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் அதன் ஒட்டுமொத்த நிதி நிலைத்தன்மையில் எந்தவொரு குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி உறுதியளித்துள்ளது.
மேலும், தங்கள் சொத்து மதிப்பு சுமார் ரூ. 3.8 டிரில்லியன் எனவும் மக்கள் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.


