
நடிகர் விஜய் அவரின் தேர்தல் பிரசாரத்தின் போது கச்சதீவு பிரச்சினையைப் பேசிய போதிலும், அது முக்கியமான பிரச்சினை அல்ல என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அவர் இன்று (06) உரையாற்றிய போது இதனை அவர் கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
”நான் அமைச்சராக இருந்த போது தமிழகத்துக்கு பல தடவை சென்றிருக்கிறேன். அங்குள்ள முக்கி பிரச்சினை கச்சதீவு கிடையாது. அங்குள்ள முதலாவது பிரச்சினை அங்குள்ள முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைதான்.
தமிழக மீனவர் பிரச்சனை இன்னும் தொடர்ச்சியாக போய்க் கொண்டுள்ளது. இது தொடர்பில் தமிழகத்துக்கு ஒரு விழிப்புணர்வு நாங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். அது என்னவென்றால் தமிழக மீனவர் பிரச்சினை என்பது, தமிழர்களுக்கும் இலங்கை ராணுவத்துக்கும், அல்லது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் நடக்கின்ற பிரச்சனை கிடையாது.
இது, தமிழகத்திலுள்ள தமிழ் மீனவர்களுக்கும் – இலங்கையில் வாழும் தமிழ் மீனவர்களுக்கும் இருக்கிற ஒரு முரண்பாடு. ஆனால் இதுவரைக்கும் அதற்கு ஒரு தீர்வு காணப்படவில்லை.

ஆகவே தமிழகத்தின் முதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ள விஜய், கட்டாயம் இலங்கை வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒரு புதிய உறவை ஆரம்பித்து அதன் மூலமாக இதற்கான தீர்வுகளை பெற்றெடுக்கலாம் என்று நான் நம்புறேன்” என்றார்.
தொடர்ந்து ஜீவன் பேசுகையில்;
“நடிகர் விஜய் தேர்தலில் வெற்றிபெற்றமையை அடுத்து, இலங்கையிலுள்ள ஆளுங்கட்சியினர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் – இதுபோன்றுதான் வெற்றிபெற்றார் என்று கூறிவருகின்றனர். அது உண்மைதான், ஆனால் ஒரே ஒரு சின்ன வித்தியாசம். விஜய் – நடித்து முடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார். அனுர – அரசியலுக்கு வந்த பின்னர் நடிக்க ஆரம்பித்தார்’” என்றார்.


