
சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர், பணியில் இருந்த பெண் வைத்தியரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மேற்படி நோயாளிளை நேற்று (14) களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேக நபர் அகலவத்தையில் உள்ள மஹகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வலிப்பு நோய் மற்றும் அதிகப்படியான மது அருந்துவதால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான மேலதிக சிகிச்சைக்காக, அந்த நபர் செவ்வாய்க்கிழமை மதியம் மத்துகமவில் உள்ள பிம்பூரா வைத்தியசாலையிலிருந்து நாகொட பொது வைத்தியசாலையின் 22 ஆம் வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் அந்த வார்டில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நோயாளியின் இரத்த அழுத்தத்தைச் சரிபார்க்க அந்தப் பெண் வைத்தியர் அவரது படுக்கையருகே சென்றபோது, அவர் வைத்தியரின் மார்பை முறையற்ற விதத்தில் தொட்டதாகக் கூறப்படுகிறது. வைத்திய’ர் உடனடியாக அவரைக் கண்டித்து, இதுபோன்ற நடத்தைக்கு எதிராக எச்சரித்துள்ளார்.
இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு வைத்திய’ர் ஒரு வைத்தியப் பரிசோதனைக் கருவியை இயக்க முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. அதே முறையில் நோயாளி இரண்டாவது முறையாகவும் அவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகப் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, வார்டின் பொறுப்பு பிரதம வைத்திய அதிகாரிக்கு வைத்தியர் தகவல் தெரிவித்தார். அதனையடுத்து வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
களுத்துறை தெற்கு பொலிஸார்’, சந்தேக நபரை காவலில் எடுத்துள்ளனர். அவர் வைத்தியசாலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


