தலைப்புச் செய்திகள்

இலங்கை போக்குவரத்துச் சபை அதிக வருமானம் ஈட்டி சாதனை

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம், இலங்கை போக்குவரத்து சபை 06 நாட்களில் ரூ. 01 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது என அதன் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர்; புத்தாண்டுக்காகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கு வசதி செய்து கொடுத்ததன் மூலம் இந்த வருவாய் ஈட்டப்பட்டதாகக் கூறினார்.

மேலும், ஏப்ரல் 11 ஆம் திகதி, ரூ. 213 மில்லியன் வருவாய் ஈட்டியதன் மூலம், அந்த சபையின் வரலாற்றில் அதிக வருவாய் ஈட்டிய நாளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், பண்டிகைக் காலத்திற்குப் பிறகு கொழும்பு மற்றும் பிற முக்கிய நகரங்களுக்குத் திரும்பும் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக, இன்று முதல் விசேட பஸ் சேவைகள் இயக்கப்படும் என தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புத்தாண்டுக்காக கொழும்பிலிருந்து வெளி ஊர்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தனியார் பேருந்துகளைப் பயன்படுத்திப் பயணம் செய்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்தார்.