
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்-இன் சமீபத்திய சொல்லாடல்களை மனநோய் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜிம் மெக்கவர்ன் தெரிவித்துள்ளார்.
ஈரானில் மேற்கொள்ளப்படும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள், அமெரிக்காவிலுள்ள மக்களை பாதுகாப்பற்றவர்களாக ஆக்குகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதிநிதிகள் சபை விதிகள் குழுவில் மிக உயர்ந்த பதவியில் உள்ள ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ஜிம் மெக்கவர்ன், X தளத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையில்; ‘அமெரிக்கா சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அவமதிக்கும்போது, மற்றவர்களையும் அவ்வாறே செய்ய நாம் தூண்டுகிறோம். அது நம் அனைவரையும் பாதுகாப்பற்றவர்களாக ஆக்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் சாத்தியமான போர்க்குற்றங்கள் உட்பட, போரில் அமெரிக்காவின் நடத்தை குறித்து மனித உரிமைகள் சட்டத்திற்கான சர்வதேச வல்லுநர்கள் அபாய ஒலி எழுப்பி வருகின்றனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மற்றொரு பதிவில், டிரம்பின் சமீபத்திய அச்சுறுத்தல்களை முற்றிலும் கட்டுப்பாடற்றவை மற்றும் மிகவும் ஆபத்தானவை என்றும் மெக்கவர்ன் விவரித்துள்ளார்.
மேலும், ‘இது மனநோய். அமெரிக்க ஜனாதிபதிக்கு உதவி தேவை’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாசசூசெட்ஸைச் சேர்ந்த செனட்டர் எட்வர்ட் மார்க்கி; ‘அச்சுறுத்தும், கட்டுப்பாடற்ற மற்றும் தகாத வார்த்தைகள் நிறைந்த ஒரு ட்வீட் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்துவிடாது’ என்று கூறியுள்ளார்.
அமெரிக்கர்கள் எரிபொருள் நிரப்பும் இடத்தில் தொடர்ந்து அதிக விலை கொடுக்காமலும், நமது படைவீரர்கள் தங்கள் உயிரை விலையாகக் கொடுக்காமலும் இருக்க ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கனெக்டிகட்டைச் சேர்ந்த செனட்டர் கிறிஸ் மர்பி குறிப்பிடுகையில்; ட்ரம்பின் திட்டமிட்ட நடவடிக்கைகளை ஒரு தெளிவான போர்க்குற்றம் என்று விவரித்து, குடியரசுக் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த வாரம் பெரும் போர்க்குற்றங்களைச் செய்யப் போவதாகக் கூற ட்ரம்ப் இன்று செய்தியாளர்களை அழைக்கிறார். குடியரசுக் கட்சித் தலைவர்கள் அவரைத் தடுக்க வேண்டும். பாலங்களையும் மின் நிலையங்களையும் தகர்ப்பதும், அப்பாவி ஈரானியர்களைக் கொல்வதும் நீரிணையை மீண்டும் திறக்காது என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதுவும் ஒரு தெளிவான போர்க்குற்றம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
மிச்சிகனைச் சேர்ந்த செனட்டர் எலிசா ஸ்லாட்கின் தெரிவிக்கையில்; ஈரானில் பொதுமக்களை கண்மூடித்தனமாகக் கொல்வதும், பாலங்கள் மற்றும் மின் நிலையங்கள் போன்ற பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை அழிப்பதும் பொறுப்பற்றதும் தவறானதும் ஆகும்.
அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் சட்டரீதியான மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், டிரம்பின் நடவடிக்கைகள் வெளிநாடுகளில் அமெரிக்கர்களின் பாதுகாப்பைக் குறைத்து, அமெரிக்கர்களின் இரத்தத்தையும் செல்வத்தையும் வீணடிக்கின்றன என்றும் அவர் கவலைப்பட்டுள்ளார்.
ஹவாயைச் சேர்ந்த செனட்டர் பிரையன் ஷாட்ஸ் இது தொடர்பில் கூறுகையில்; டிரம்பின் திட்டங்களை எதிர்க்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது – குண்டு வீசுவது ஒரு போர்க்குற்றம், அதை எதிர்த்துப் பேசுவதற்கான நேரம் இதுவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நேற்று (05) தனது ட்ரூத் சமூக வலைத்தள பதிவொன்றில் ஈரானின் மின் கட்டமைப்புகள் மற்றும் பாலங்களைத் தகர்க்கப்போவதாக அச்சுறுத்தியிருந்ததோடு, மிகவும் மோசமான தூசண வார்த்தைகளையும் அந்தப் பதிவில் பயன்படுத்தியிருந்தார்.


