தலைப்புச் செய்திகள்

25 ஆயிரம் மெட்ரிக் டொன் உரத்துடன் நாளை நாட்டுக்கு கப்பல் வந்து சேரும்: பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன

25,000 மெட்ரிக் டொன் உரத்தை ஏற்றி வரும் ஒரு கப்பல் நாளை (ஏப்ரல் 5) நாட்டிற்கு வந்து சேரும் என – விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையால் எழும் உரச் சவால்களை வெற்றிகரமாக நிர்வகிக்கும் திறன், அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.

சிறுபோக பருவத்தின் தொடக்கத்தில் விவசாயிகளிடையே உரம் குறித்த கவலைகள் எழுந்தபோதிலும், நாட்டில் தற்போதுள்ள தேவைகளை விட அதிகமான MOP மற்றும் TSP உரங்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யூரியா உரம் தொடர்பாக ஒரு சிறிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதை ஒப்புக்கொண்ட பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன, நெற் செய்கைக்குத் தேவையான 80,000 மெட்ரிக் டொன்களுடன் ஒப்பிடும்போது, ​​நாட்டில் ஏற்கனவே சுமார் 100,000 மெட்ரிக் டொன்கள் கையிருப்பில் இருப்பது போதுமானது என்றும் கூறினார்.

இருப்பினும், ஊடுபயிர்கள் மற்றும் துணைப் பயிர்களுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கையிருப்பு தேவைப்படலாம். இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, 25,000 மெட்ரிக் டொன் உரத்தை ஏற்றி வரும் கப்பல் ஒன்று, நாளை 5ஆம் திகதி நாட்டுக்கு வரவுள்ளது என்றும், வரும் காலங்களில் மேலும் உரம் கொண்டுவருவதற்கான உத்தரவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.