தலைப்புச் செய்திகள்

தெரிந்தே கொன்றோம்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 03 ஊடகவியலாளர்கள் பலி

தெற்கு லெபனானில், தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்த ஊடகவியலாளர் வாகனத்தின் மீது – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று லெபனான் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் மேலும் பல ஊடகவியலாளர்கள் காயமடைந்தனர். மேலும் ஒரு மருத்துவ உதவியாளரும் கொல்லப்பட்டார்.

அல் மயாதீன் ஊடகத்தைச் சேர்ந்த பாத்திமா ஃபதூனி மற்றும் அவரது சகோதரரும் சக ஊழியருமான முகமது, அல்மனார் ஊடகத்தைச் சேர்ந்த அலி சுஹைப் ஆகியோர் இன்று சனிக்கிழமையன்று கொல்லப்பட்டனர். நான்கு துல்லியமான ஏவுகணைகள் அந்த வாகனத்தைத் தாக்கியதாக அல் மயாதீன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆம்பியுலன்ஸ்கள் வந்தபோது, ​​மருத்துவ உதவியாளர்களும் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். அல் மயாதீன் மற்றும் அல்-மனார் ஊடகங்கள் தங்கள் ஊடகங்களின் மரணங்களை உறுதிப்படுத்தியுள்ளன.

இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்டதுடன், ஊடகவியலாளர் சுஹைப் என்பவர் – ஹிஸ்புல்லாவின் உளவுப் பிரிவுக்காக, தெற்கு லெபனானில் உள்ள இஸ்ரேலியப் படைகளின் நிலைகளைக் கண்காணித்து வந்ததாகக் கூறியுள்ளது. மேலும், அவர் ஹிஸ்புல்லாவின் பிரசாரத்தைச் செய்து வந்ததாகவும் அது குற்றம் சாட்டியது.

இதேவேளை, பல தசாப்தங்களாக லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களைப் பற்றி செய்தி வெளியிட்டு வந்த, தங்களின் மிக முக்கியமான போர்க்காலச் செய்தியாளர்களில் ஒருவர் என்று, அவர் பணியாற்றிய அல்-மனார் நிறுவனம் விவரித்துள்ளது.

காசாவில் 270-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களைக் கொன்றுள்ள இஸ்ரேல், தான் குறிவைக்கும் செய்தியாளர்களை – ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் அல்லது அவற்றுடன் தொடர்புடையவர்கள் என்று எந்த ஆதாரமும் வழங்காமல் அடிக்கடி குற்றம் சாட்டுகிறது.

இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டை, கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் பணியாற்றிய இரு ஊடக நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.